TN BJP: கழற்றி விடப்படுகிறாரா அண்ணாமலை! பாஜகவின் அடுத்த தலைவர் யார்?
Jan 18, 2025, 11:42 AM IST

அடுத்து வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வாழ்வா? சாவா? போராட்டமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி பாஜக கருதுகிறது.
தமிழக பாஜகவில் அண்ணாமலைக்கு பதிலாக புதிய மாநிலத் தலைவரை நியமனம் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சவால் நிறைந்த 2026 தேர்தல்!
அடுத்து வரவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தல் அதிமுக மற்றும் பாஜக கட்சிகளுக்கு இடையே வாழ்வா? சாவா? போராட்டமாக உள்ளது. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் திமுக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் உள்ளதாக டெல்லி பாஜக கருதுகிறது. எனவே அதிமுக உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் களத்தில் கடும் சவாலை ஏற்படுத்த முடியும் என்பது டெல்லியின் கணக்கு.
அண்ணாமலை மீது அதிருப்தியா?
அதே வேளையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உறவினர்களின் வீடுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வருமானவரி ரெய்டுகள் நடைபெற்றது. பொங்கல் அன்று சென்னையில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அவர் மேடையில் பேசும் போது அண்ணாமலையின் பெயரை குறிப்பிடாமல் பேசியது புதிய விவாதங்களை கிளப்பி உள்ளது.
பாஜக உட்கட்சித்தேர்தல்!
தேசிய கட்சியான பாஜகவை பொறுத்தவரை மாநிலத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் என வரையறுக்கப்பட்டு உள்ளது. அக்கட்சியின் தேசியத் தலைவர் முதல் வார்டு வரை புதிய நிர்வாகிகளை நியமனம் செய்யும் பணிகள் நாடு முழுவதும் வேகம் பெற்று வருகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 சட்டமன்றத் தொகுதிகளை வென்றது. வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், எம்.ஆர்.காந்தி. சரஸ்வதி ஆகியோர் எம்.எல்.ஏக்களாக வென்றனர். அரவக்குறிச்சி தொகுதியில் அண்ணாமலை தோற்ற நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி முதல் அக்கட்சித் மாநிலத் தலைவராக அவர் இருந்து வருகிறார். அவரது பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் அப்பதவிக்கு வேறு ஒருவர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த 2 நாட்களுக்குள் பாஜகவுக்கு புதிய மாநிலத்தலைவர் யார் என்பது தெரிய வரும்.
அடுத்த மாநிலத் தலைவர் யார்?
அதிமுகவில் இருந்து வந்த பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் அல்லது பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவரை தலைவராக நியமிக்க தேசியத் தலைமை ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் தமிழ்நாடு மாநில பாஜகவின் ஸ்டார்ட் அப் அணியின் தலைவராக உள்ள ஆனந்தன் அய்யாசாமியின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம். கட்சியின் எதிர்காலம், அனுபவம், சூழலை கருத்தில் கொண்டு யார் தலைவர் என்பதை இன்னும் ஒருசில நாட்களில் பாஜக தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்