Tamil Top 10 News: உதவித் தொகை இருமடங்காக உயர்வு முதல் தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும் வரை - டாப் 10 நியூஸ்
Sep 20, 2024, 02:15 PM IST
Tamil Top 10 News: உதவித் தொகை இருமடங்காக உயர்வு, சென்னையில் 14 கிலோ கஞ்சா பறிமுதல், தமிழ்நாட்டில் வெப்பம் அதிகரிக்கும் உள்பட பிற்பகல் டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் காணலாம்..
Afternoon Tamil Top 10 News: தமிழகம் முழுவதும் நிகழ்ந்த அரசியல் முக்கிய நிகழ்வுகள் உள்பட அனைத்து விதமான முக்கிய செய்திகளை இந்தத் தொகுப்பில் தெரிந்துகொள்ளலாம்.
முதல்வர் உத்தரவு
பள்ளி, கல்லூரிகளிலும் பயிலும் மாற்றுத் திறனாளி மாணவ-மாணவியர் உதவித் தொகையை இருமடங்காக உயர்த்தி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பூனையின் விளையாட்டால் நேர்ந்த விபரீதம்!
பொள்ளாச்சியில் வீட்டின் வளாகத்திற்குள் சுற்றித்திரிந்த கட்டுவிரியன் பாம்பை கடித்துக் கொண்டு வந்து, படுக்கை அறையில் போட்ட வளர்ப்பு பூனை. அறையில் தூங்கிக் கொண்டிருந்த உரிமையாளர் சாந்தியை பாம்பு கடித்ததில் அவர் உயிரிழந்தார். பாம்பு கடித்ததும் அலறிய சாந்தியை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
கன்டெய்னர் திருட்டு - 6 பேர் கைது
சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் இருந்த கன்டெய்னர் திருட்டில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்துள்ளனர். சீனாவில் இருந்து எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கன்டெய்னர் திருடி உள்ளனர். டிரெய்லர் லாரி உரிமையாளர் மணிகண்டன், லாரிகள் ஏற்பாடு செய்யும் இடைத்தரகர்கள் ராஜேஷ், நெப்போலியன், சிவபாலன், முத்துராஜ், ஓட்டுனர் பால்ராஜ் ஆகியோர் கைது செய்துள்ளனர்
குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
மைலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதாகியுள்ள தேவநாதன், தேவ சேனாதிபதி, சுதிர் ஆனந்த் ஆகிய 3 பேரிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று விசாரணை செய்து வருகின்றனர். மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கி இருந்தது. பண மோசடி தொடர்பாக 4100-க்கும் மேற்பட்டோர் சென்னை அசோக் நகர் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர்.
கூவத்தில் கட்டடக்கழிவுகள்!
சென்னையில் ஈரடுக்கு அதிவிரைவு மேம்பால தூண்கள் அமைக்க கூவம் ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக் கழிவுகளை, செப்.30-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
14 கிலோ கஞ்சா பறிமுதல்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இன்று காலை தான்பாத் நகரில் இருந்து வந்த விரைவு ரயிலில் போலீசார் வழக்கமான சோதனை மேற்கொண்டபோது, நடைமேடையில் கேட்பாரற்று ஒரு டிராலி பேக் இருக்க, திறந்து பார்க்கும் போது கஞ்சா இருந்துள்ளது. கைப்பற்றப்பட்ட 14 கிலோ கஞ்சா, பெரியமேடு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு கடத்தி வந்தவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இலக்கை அடைந்தது காவேரி!
சென்னை மெட்ரோ ரயிலின் 2ம் கட்ட திட்டத்தில் கிரீன்வேஸ் - அடையாறு சந்திப்பு வரையிலான சுரங்கம் தோண்டும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்தது இயந்திரம் காவேரி. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கி 1228 மீட்டர் சுரங்கம் தோண்டி 178 நாட்களில், பணி நிறைவடைந்துள்ளது. இயந்திரத்தின் முகப்பில் உள்ள வெட்டும் கருவிகள் 65 முறை சீரமைக்கப்பட்டு இந்த பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அருகே பாத்திர வியாபாரி வெட்டிக்கொலை
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் முருகன் என்ற பாத்திர வியாபாரி மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து முருகனை கொலை செய்த மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.
விஜய் வெளியிட்ட அறிவிப்பு
விக்கிரவாண்டியில் அக்டோபர் 27-ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முழு செய்தியையும் படிக்க
4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்
தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெப்பம், இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்படலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டாபிக்ஸ்