School Reopening: ’வண்ண கயிறுகளுக்கு தடை முதல் வாட்ஸ் அப் வரை!’ பள்ளி திறப்புக்கு பின் அதிரடியில் இறங்கும் கல்வித்துறை!
May 24, 2024, 06:43 PM IST
”Tamil Nadu School Reopening 2024-25: பள்ளிகளில் வண்ண கயிறுகளுக்கு தடை, வாட்சஸ் அப் மூலம் பெற்றோர்களை ஒருங்கிணைத்தல், பள்ளிகளில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட 3 அதிரடி நடவடிக்கைகளில் பள்ளிக்கல்வித்துறை ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது ”
தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி நிறைவுபெற்றது. அதேபோல், நான்காம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் வரை, ஏப்ரல் 2ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரை முழு ஆண்டுப் பரீட்சை நடந்து முடிந்தது. மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை தேர்வு நடந்து முடிந்தது.
இதனிடையே ஜூன் 1ஆம் தேதி, இந்த வெப்பத்தினாலும் தேர்தல் முடிவுகள் அறிவிப்பின் காரணமாகவும் பள்ளி, கல்லூரிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்காமல், வரும் ஜூன் 10ஆம் தேதி, தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய திட்டங்கள்
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளிகளில் மூன்று புதிய உத்தரவுகள் நடைமுறைக்கு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. கோடை விடுமுறை காலம் முடிவடைந்த பிறகு வரும் ஜூன் 10ஆம் தேதி அன்று மீண்டும் பள்ளிகளை திறக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டு வருகிறது.
பள்ளி வளாகங்களில் கண்காணிப்பு
தமிழ்நாட்டில் போதை பொருட்கள் அதிகம் பறிமுதல் செய்யப்பட்டு வரும் நிலையில், பள்ளி மாணவர்கள் மத்தியில் போதை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன என்பதால் பள்ளி மற்றும் அதனை சுற்றி உள்ள வளாகங்களில் போதை பொருட்கள் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பெற்றோர்களை ஒருங்கிணைக்கும் வாட்ஸ் அப் எண்கள்
அடுத்ததாக தமிழகம் முழுவதும் உள்ள ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் பெற்றோர்களின் செல்போன் எண்களை ஒருங்கிணைத்து வாட்ஸ் அப் மூலமாக மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை தெரிவிப்பதற்கான ஏற்பாடுகளையும் பள்ளிக்கல்வித்துறை முன்னெடுக்க உள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகள் ஜூன் மாதம் பள்ளித்திறப்புக்கு பிறகு துரிதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கெனவே இதுவரை பெற்றோர்களின் 70 லட்சம் செல்போன் எண்கள் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில், மீதம் உள்ள செல்போன் எண்களை பள்ளிகள் திறந்ததும் ஒருங்கிணைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
சாதிய மோதல்களை உண்டாக்கும் வண்ண கயிறுகளுக்கு தடை
மூன்றாவதாக மாணவர்கள் தங்கள் சமூகத்தின் அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ணக்கயிறுகள் அணிவதற்கும் தடை விதிக்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக தென் மாவட்டங்களில் மாணவர்கள் தங்கள் சமூக அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் வண்ண கயிறுகளை கட்டுவதால் மோதல்கள் உருவாகிறது.
பள்ளி மற்றும் கல்லூரிகளில் இதுபோன்ற சாதி மற்றும் மத மோதல்களை தடுக்க ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இக்குழுவின் விசாரணை அறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சமர்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே பள்ளிகள் திறக்கப்பட்டதும், இந்த மூன்று விவகாரங்களும் உடனடியாக அமலுக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளி மாணவர்களிடையே வேற்றுமையை ஏற்படுத்தும் வண்ண கயிறுகளை அணிவதற்கு தடை விதிக்கப்படுவதற்கான உத்தரவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டாபிக்ஸ்