Savukku Shankar: ’கண்ணத்தில் அறைந்து கையை முறுக்கினர்! பெண் காவலர்கள் மீது யூடியூபர் சவுக்கு சங்கர் புகார்!
May 15, 2024, 09:55 PM IST
Savukku Shankar: பெண் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும், இடது கையை முறுக்கியதாகவும் சவுக்கு சங்கர் கூறி உள்ளார்.
கண் கண்ணாடியை கழற்ற சொல்லி பெண் காவலர்கள் தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
திருச்சி அழைத்து செல்லப்பட்ட சவுக்கு சங்கர்
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் திருச்சி சைபர் கிரைம் காவலர்கள் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிர்ந்து இருந்த நிலையில். திருச்சி மாவட்டத்தில் உள்ள மூன்றாவது கூடுதல் உரிமையில் நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயப்பிரதா முன்பு சவுக்கு சங்கர் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை மருத்துவ பரிசோதனை செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இன்று காலை கோவை மத்திய சிறையில் இருந்து பெண் காவலர்கள் பாதுகாப்பு உடன் திருச்சிக்கு அழைத்து வந்து உள்ளனர்.
அப்போது காலை உணவாக சவுக்கு சங்கருக்கு பொங்கல் வாங்கி கொடுத்த போது கண்ணாடியை கழற்ற சொல்லி, பெண் காவலர்கள் கண்ணத்தில் அறைந்ததாக நீதிபதி முன் வாக்குமூலம் கொடுத்து உள்ளார்.
பெண் காவலர்கள் தன்னை வேனில் வைத்து அடித்து மன்னிப்பு கேட்க சொல்லி வீடியோ எடுத்ததாகவும், இடது கையை முறுக்கியதாகவும் சவுக்கு சங்கர் கூறி உள்ளார்.
சவுக்கு சங்கரின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஜெயப்பிரதா, திருச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
சவுக்கு சங்கரின் வழக்கறிஞர்கள் முன் வைத்த வாதத்தின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசிய புகாரில் 5 பிரிவுகளின் கீழ் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 5 நாள் போலீஸ் காவல் கேட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து உள்ளனர்.
சவுக்கு சங்கர் கைதின் பின்னணி
ரெட்பிக்ஸ் என்ற யூடியூப் சேனலில் அதன் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு பேட்டி அளித்த சவுக்கு சங்கர், பெண் காவலர்கள் குறித்து பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து காவல்துறையில் உள்ள பெண் காவலர்கள் குறித்து அவதூறாக சமூக வலைதளங்களில் பேசிய விவகாரத்தில் அவரை கோவை சைபர் கிரைம் போலீசார் தேனியில் வைத்து கடந்த மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 3 மணியளவில் கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய நிலையில், சவுக்கு சங்கர். வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பின்னர் கோவை மத்திய சிறையில் சவுக்கு சங்கர் அடைக்கப்பட்டார். அங்கு சிறை காவலர்கள் சவுக்கு சங்கரை தாக்கியதாக அவரது வழக்கறிஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சவுக்கு சங்க்ரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டு உள்ளார்.
சவுக்கு சங்கர் வழக்கறிஞர் பேட்டி
இதுதொடர்பாக அவரது வழக்கறிஞர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அளித்தார். அப்போது, "சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கு முன்பும் சிறையில் அடைப்பதற்கு முன்பும் என இரண்டு முறை முழு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
அப்போது அவரது உடலில் எந்தவித பாதிப்பும் இல்லை. கை கால் நன்றாக இருந்தது. சிசிடிவி காட்சியிலும் இது தெரியும்.
தற்போது அவரது கைகள் கடுமையான தாக்குதலுக்கு உட்பட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலில் தடிப்பு தடிப்பாக ரத்தக் கட்டுகள் ஏற்பட்டுள்ளன.
சவுக்கு சங்கர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டதும் 10க்கும் மேற்பட்ட சிறை காவலர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவரது கண்களை கட்டிவிட்டு, குச்சியில் துணி சுற்றி காவலர்கள் அவரை தாக்கியதாக சவுக்கு சங்கர் என்னிடம் கூறினார் என தெரிவித்தார்.