EPS VS Sengottaiyan: ’எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமே ஈபிஎஸ்!’ செங்கோட்டையனுக்கு உதயகுமார் பதிலடி!
Updated Feb 13, 2025 12:27 PM IST

அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் வைக்கவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையைன் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.
எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடி பழனிசாமி உள்ளார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்து உள்ளார்.
அத்திகடவு - அவிநாசி திட்டத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நடத்திய பாராட்டு விழாவில் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோரின் படங்கள் வைக்கவில்லை என்று கே.ஏ.செங்கோட்டையைன் குற்றம்சாட்டி இருந்த நிலையில் ஆர்.பி.உதயகுமாரின் இந்த கருத்து விவாதத்தை கிளப்பி உள்ளது.
அத்திக்கடவு அவிநாசி திட்ட பாராட்டு விழா
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுசெயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு கோவை மாவட்டம் அன்னூரில் விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில் செங்கோட்டையன் கலந்து கொள்ளாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அத்திக்கடவு - அவிநாசி திட்ட விழாவை ஏற்பாடு செய்வதவர்கள் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தார்கள். எங்களை உருவாக்கிய புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி அம்மாவின் திருவுருவப்படங்கள் இல்லை. எங்களிடம் கலந்து இருந்தால் உங்கள் கவனத்திற்கு கொண்டு வருவேன். டிஜிட்டல் போர்ட் வைத்த பின்னர்தான் எனது கவனத்திற்கு வந்தது. அவருடைய படங்கள் இல்லை என்று சொன்னேன். நான் புறக்கணிக்கவில்லை. அங்கே செல்லவில்லையே தவிர, அத்திக்கடவு - அவிநாசி திட்ட குழுவிடம் நான் இதை சொல்லி உள்ளேன்.” என கூறி இருந்தார்.
உடைத்து பேசிய கே.ஏ.செங்கோட்டையன்
மேலும் நேற்றைய தினம் ஈரோட்டில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை என்று சொன்னேன். நான் அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. நான் அதை புறக்கணிக்கவில்லை. அவர்கள் படம் இல்லாததால் நான் அதில் கலந்து கொள்ளவில்லை. அவர்கள்தான் என்னை வாழ வைத்தவர்கள். எத்தனையோ பேர் என்னென்னவோ சொல்கிறார்கள். ஆனால் என்னை பொறுத்தவரையில் நேர்மையான பாதையில், தன்னலம் கருதாது பாடுபடக்கூடியவன். எத்தனையோ வாய்ப்புகள் வரும்போது, அதை பற்றி கவலைப்படவில்லை. இயக்கம் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன் நான். என்னை சோதிக்காதீர்கள் என பேசி இருந்தார்.
ஆர்.பி.உதயகுமார் வெளியிட்ட வீடியோ
இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரும், அதிமுக சட்டமன்றக் கட்சித் துணைத் தலைவருமான ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு உள்ளார். அதில், ”மக்கள் சக்தியே மகத்தான சக்தி, மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் ஆயுளையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியும். மக்கள் சக்தி பெற்ற அதிமுகவுக்கு எந்த சக்தியாலும் சேதாரம் ஏற்படுத்திவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடியார் உள்ளார். களத்திற்கு சென்று வாக்காளர்களை சந்திப்போம். மக்கள் விரும்பும் தலைவர், மக்கள் எதிர்பார்க்கும் தலைவராக எடப்பாடியார் உள்ளார். எதிரிகள், துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவை அசைத்து பார்க்க முடியாது” என தெரிவித்து உள்ளார்.