RK Suresh: ’ஆருத்ரா ஏஜெண்டிடம் 15 கோடி பணம் வாங்கியது உண்மைதான்!’ ஆர்.கே.சுரேஷ் வாக்குமூலம்? பாஜகவில் பரபரப்பு!
Dec 13, 2023, 10:23 AM IST
”Aarudhra Gold Company Scam: இன்றைய தினம் நடைபெறும் விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது”
சென்னையில் இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீடுகளுக்கு 25 முதல் 30 சதவீதம் வட்டி தருவதாக கூறி காஞ்சிபுரம், வேலூர் திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பொதுமக்களிடம் இருந்து 2,438 கோடி ரூபாய் வரை பணம் பெற்று மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட புகார்கள் அளிக்கப்பட்ட நிலையில் நடிகரும், பாஜக ஓபிசி பிரிவு துணைத் தலைவராக இருந்த ஆர்.கே.சுரேஷ் உட்பட 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த பிரச்னையில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்துவந்த நிலையில் ஆர்.கே.சுரேஷ் திடீரென தலைமறைவானார். பின்னர் அவர் துபாயில் இருப்பதாக செய்திகள் வெளியானது.
முன்னதாக கடந்த டிசம்பர் 10ஆம் தேதி அன்று துபாயில் இருந்து இந்தியா திரும்பிய ஆர்.கே.சுரேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷ் விடுவிக்கப்பட்டார்.
ஆருத்ரா பண மோசடி வழக்கில் துபாயில் தலைமறைவாக இருந்த நடிகரும், முன்னாள் பாஜக நிர்வாகியுமான ஆர்.கே.சுரேஷ் நேற்றைய தினம் சென்னையில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முன் ஆஜர் ஆனார்.
அப்போது அவரிடம், தலைமறைவானது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ’தலைமறைவா? நா ஏங்க தலைமறைவாக போறேன். எல்லாமே இங்க இருக்கும்போது நா ஏன் தலைமறைவாக போறேன்; போயிட்டு வந்து பேசுறன்’ என கூறி விசாரணைக்கு சென்றார்.
ஆர்.கே.சுரேஷிடம் 7 மணிநேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய போலீசார் இன்றைய தினம் (டிச.13) மீண்டும் ஆஜராக உத்தரவிட்டு இருந்தனர். இந்த நிலையில் ஓயிட் ரோஸ் என்ற திரைப்படத்திற்காக ஆருத்ரா நிறுவனத்தில் ஏஜெண்டாக இருந்த ரூசோவிடம் இருந்து 15 கோடி ரூபாய் பணம் பெற்றதை ஆர்.கே.சுரேஷ் ஒப்புக் கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் இன்றைய தினம் நடைபெறும் விசாரணையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் உள்ளவர்கள் யார் என்பது குறித்து தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.