Omni Bus: விதிகளை மீறிய ஆம்னி பஸ்கள்! ஆக்ஷனில் இறங்கிய சிவசங்கர்! என்ன செய்தார் தெரியுமா?
Nov 13, 2023, 08:30 AM IST
”விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு 18 லட்சத்து 76 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம்”
தீபாவளி பண்டிகைக்காக சொந்த ஊர்களுக்கு செல்வோரிடம் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூல் செய்த ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி ஆயுதபூஜை விடுமுறைக்காக ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு சென்றபோது ஆம்னி பேருந்துகள் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்ததாக புகார் எழுந்தது. இதனால் ஆம்னி பேருந்துகளுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டதுடன், சில பேருந்துகளை அரசு பறிமுதலும் செய்தது. இதனால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் அறிவித்த நிலையில் அரசு பேச்சுவார்த்தையால் கைவிடப்பட்டது.
பின்னர் தீபாவளி பண்டிகைக்கு இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்துடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆம்னி பேருந்து கட்டணத்தை கடந்த காலத்தில் நிர்ணயித்த அரசு கட்டணத்தைவிட 5 சதவீதம் குறைக்க ஒப்புக்கொண்டதாக அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி சென்னை - கோவை - குறைந்தபட்சம் ரூ.1724 - அதிகபட்சம் ரூ.2874
சென்னை - திருச்சி - குறைந்தபட்சம் ரூ.1066 - அதிகபட்சம் ரூ.1777
சென்னை - நெல்லை - குறைந்தபட்சம் ரூ.1959 - அதிகபட்சம் ரூ.3266
சென்னை - மதுரை - குறைந்தபட்சம் ரூ.1505 - அதிகபட்சம் ரூ.2508
சென்னை -சேலம் - குறைந்தபட்சம் ரூ.1363 - அதிகபட்சம் ரூ.1895
சென்னை - நாகர்கோயில் - குறைந்தபட்சம் ரூ.2211 - அதிகபட்சம் ரூ.3765 என நிர்ணயம் செய்யப்பட்டது.
தீபாவளி விடுமுறைக்காக இயக்கப்பட்ட பெரும்பாலான ஆம்னி பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணமே வசூலிக்கப்பட்ட நிலையில் விதிமீறல்களில் ஈடுபட்ட ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி கூடுதல் கட்டணம் வசூல் உள்ளிட்ட விதிமீறல்களில் ஈடுபட்ட 1,223 பேருந்துகளுக்கு 18 லட்சத்து 76 ஆயிரத்து 700 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. முறையாக வரி செலுத்தாத ஆம்னி பஸ் உரிமையாளர்களிடம் இருந்து 11 லட்சத்து 25ஆயிரத்து 180 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்களில் ஈடுபட்ட 8 பேருந்துகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டாபிக்ஸ்