‘என் வாய் நான் அடிப்பேன்..’ சென்னை விமானத்தில் புகை பிடித்து அடவாடி செய்தவர் கைது!
Jul 11, 2023, 07:14 PM IST
இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சதாம் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளை பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
ஒரு சிகரெட்டை பத்த வைத்து, ஒட்டுமொத்த விமானத்தையும் அதிர்ச்சியடைய வைத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வந்த விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
குவைத்திலிருந்து சென்னை நோக்கி இண்டிகோ விமானம் ஒன்று நேற்று முன்தினம் புறப்பட்டுள்ளது. மொத்தம 184 பயணிகள் அதில் பயணித்துள்ளனர். நடுவானில் 38 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, திடீரென விமானம் உள்ளே புகை வந்ததை கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.
எங்கிருந்து புகை வருகிறது என்று பார்த்த போது, அங்குள்ள பயணி ஒருவர் புகை பிடித்துக் கொண்டிருப்பதை கண்டு சக பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். அவரிடம் விசாரித்த போது, அவர் மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியைச் சேர்ந்த முகமது சதாம் என்பதும், அவருக்கு 32 வயதாவதும் தெரியவந்தது.
சதாமின் இந்த செயலுக்கு சக பயணிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விமானப் பணி பெண்கள் வந்து புகைபிடிப்பதை நிறுத்துமாறு சதாமிடம் கோரிக்கை வைத்தனர். ஆனால், அவர் அதை ஏற்க மறுத்து தொடர்ந்து புகைபிடித்துக் கொண்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து விமானத்தில் இருந்த தலைமை விமானியிடம் பணிப்பெண்கள் புகார் செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட தலைமை விமானி, நடந்த விபரங்களை அவர்களிடம் கூறியுள்ளார்.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு விமானம் பத்திரமாக வந்திறங்கியது. விமானத்தில் ஏறிய இண்டியோ பாதுகாப்பு அதிகாரிகள், அட்டகாசம் செய்த முகமது சதாமை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்களிடம் கோபம் அடைந்த சதாம், ‘என்னோட வாய், நான் சிகரெட் பிடிக்கிறேன்.. உங்களுக்கு என்ன பிரச்னை?’ என்று கடும் வாக்குவாதம் செய்துள்ளார் சதாம்.
அவரை கீழே அழைத்துச் சென்று குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகளை செய்ய வைத்த பாதுகாப்பு அதிகாரிகள், அதன் பின் விமான நிலைய போலீசாரிடம் முறைப்படி ஒப்படைத்தனர். இண்டிகோ ஏர்லைன்ஸ் பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் அடிப்படையில் சதாம் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளை பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
நடுவானில் சிகரெட்டிற்கு நடந்த சண்டையில் அதிர்ந்து போன பயணிகள், சென்னை விமான நிலையத்தில் ஒரு வழியாக தரையிறங்கி நிம்மதியாக வீடு திரும்பினர்.
டாபிக்ஸ்