Cauvery: ’தமிழ்நாட்டுக்கு திறந்துவிடும் நீரை உடனடியாக நிறுத்த வேண்டும்’ கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை!
Aug 16, 2023, 09:45 PM IST
”காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று முதலமைச்சர் சித்தராமையா கூறிய அடுத்த நாளே டி.கே.சிவக்குமார் தலைமையிலான நீர்வளத்துறை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதன் மூலம் நீர் மேலாண்மையில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை என்பது புலப்படுகிறது”
தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பதை நிறுத்த வேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு கடந்த ஜுலை மாதம் முதல் தர வேண்டிய காவிரி நதிநீர் பங்கீட்டை கர்நாடக அரசு முறையாக அளிக்காத நிலையில் டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில் தமிழ்நாடு அரசு இந்த பிரச்னையை கிளப்பியது. இதில் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழ்நாடு நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையிலான அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
காவிரி நீர் பங்கீட்டை தர கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு 10 டிஎம்சி நீரை திறப்பதாக கர்நாடக நீர்வளத்துறை அமைச்சர் டிகே சிவக்குமார் அறிவித்தார். இதனை அடுத்து கர்நாடக-தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு 10ஆயிரம் கன அடியாக அதிரித்துள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு திறந்துவிடப்படும் காவிரி நீரை நிறுத்த வேண்டும் என பாஜக முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், குறுவை சாகுபடிக்கு தமிழ்நாடு இரண்டு மடங்கு தண்ணீரை பயன்படுத்தி உள்ளது. மேலும் குறுவை சாகுபடி செய்யும் பரப்பளவையும் அதிகரித்துள்ளது. இது கூறித்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் கர்நாடக அரசு எதிர்ப்பை பதிவு செய்யாமல் தமிழ்நாடு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன் உடனேயே தண்ணீர் திறந்துவிட்டது மன்னிக்க முடியாத குற்றம்.
காவிரியில் தண்ணீர் திறக்க முடியாது என்று முதலமைச்சர் சித்தராமையா கூறிய அடுத்த நாளே டி.கே.சிவக்குமார் தலைமையிலான நீர்வளத்துறை தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விட்டுள்ளதன் மூலம் நீர் மேலாண்மையில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை என்பது புலப்படுகிறது. இது நமது மாநிலத்தின் நீர் பங்கினை பாதுகாக்கும் அறிகுறியாக தெரியவில்லை.
தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிடுவதை உடனடியாக நிறுத்தி உச்சநீதிமன்றத்தில் நமது மாநிலத்தின் உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் மாநில விவசாயிகள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
டாபிக்ஸ்