RB Udhayakumar vs OPR: நேற்று தியாக தலைவி! இன்று எடப்பாடியார்! நாளை யாரோ? ஆர்.பி.உதயகுமாரை கலாய்க்கும் ஓபிஆர்!
Updated Feb 13, 2025 05:15 PM IST

அத்திக்கடவு -அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் என ஆர்.பி.உதயகுமார் பேசியது அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் அரசியல் நிலைப்பாடுகளை முன்னாள் அதிமுக எம்.பியும், ஓ.பன்னீர் செல்வத்தின் மகனுமான ஓ.பி.ரவிந்திரநாத் விமர்சனம் செய்து உள்ளார்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம் பாராட்டு விழா தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றது.
ஈபிஎஸ்க்கு புகழாரம் சூட்டிய ஆர்.பி.உதயகுமார்
இந்த நிலையில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை எம்ஜிஆர்., மற்றும் ஜெயலலிதாவின் மறு உருவம் என்று புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ”மக்கள் சக்தியே மகத்தான சக்தி, மக்கள் சக்திதான் ஒரு இயக்கத்தின் ஆயுளையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்க முடியும். மக்கள் சக்தி பெற்ற அதிமுகவுக்கு எந்த சக்தியாலும் சேதாரம் ஏற்படுத்திவிட முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுவடிவமாக எடப்பாடியார் உள்ளார். களத்திற்கு சென்று வாக்காளர்களை சந்திப்போம். மக்கள் விரும்பும் தலைவர், மக்கள் எதிர்பார்க்கும் தலைவராக எடப்பாடியார் உள்ளார். எதிரிகள், துரோகிகள் எடுத்து வைக்கும் வாதங்கள் அதிமுகவை அசைத்து பார்க்க முடியாது” என தெரிவித்து இருந்தார்.
அத்திக்கடவு -அவிநாசி திட்ட பாராட்டு விழாவில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறவில்லை என்று கூறி கே.ஏ.செங்கோட்டையன் நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் என ஆர்.பி.உதயகுமார் பேசியது அரசியல் விவாதங்களுக்கு வித்திட்டு உள்ளது.
ஆர்.பி.உதயகுமாரை விமர்சிக்கும் ஓபிஆர்
ஆர்.பி.உதயகுமாரின் வீடியோவை விமர்சித்து அதிமுக முன்னாள் எம்.பியும், ஓபிஎஸின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் தனது சமூகவலைத்தளத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்.
முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயக்குமார் அவர்களே...
நேற்று - மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள்...
இன்று - மாண்புமிகு எம்.ஜி.ஆர் மற்றும் மாண்புமிகு அம்மா அவர்களின் மறுஉருவம் புரட்சித்தமிழர் திரு.எடப்பாடி பழனிச்சாமி...
நாளை யாரோ...? என்ன விளையாட்டு இது...? என கேள்வி எழுப்பி உள்ளார்.