தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  No Parking Fine: சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்!

No Parking Fine: சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்!

Karthikeyan S HT Tamil

May 23, 2024, 06:27 PM IST

google News
No Parking Fine: சென்னை - புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து காவல் போலீசார் அபராதம் விதித்தனர்.
No Parking Fine: சென்னை - புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து காவல் போலீசார் அபராதம் விதித்தனர்.

No Parking Fine: சென்னை - புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் நோ பார்க்கிங் பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து காவல் போலீசார் அபராதம் விதித்தனர்.

நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி வழியாக தூத்துக்குடிக்கு சென்ற அரசுப் பேருந்தில் காவலர் ஆறுமுகப்பாண்டி காவல் சீருடையில் இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என கூறி வாக்குவாதம் செய்தார்.

தொடர்ந்து நடத்துநர் அரசு பேருந்தில் காவலர்கள் பயணிக்க வாரண்ட் வேண்டும் இல்லாதபட்சத்தில் டிக்கெட் எடுக்க வேண்டும் என கூறியதை தொடர்ந்து, அவர் எல்லோருக்கும் ஒரே விதிமுறைகளை கொண்டு வாருங்கள் போக்குவரத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டும் இலவசமாக அனுமதிக்கிறீர்கள், நாங்களும் அரசு வேலை பார்ப்பவர்கள் தான் எங்களையும் இலவசமாக நீங்கள் பயணிக்க விட வேண்டும் என தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

போக்குவரத்து துறை விளக்கம்

இதையடுத்து இது தொடர்பாக போக்குவரத்து துறை சார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், "காவலர்கள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டாயம் டிக்கெட் எடுக்க வேண்டும். வாரண்ட் இருக்கும் பட்சத்தில் மட்டுமே அவர்களுக்கு கட்டணமில்லா பயணம் அனுமதிக்கப்படுகிறது. அந்தத் தொகையையும் போக்குவரத்துத் துறை அரசிடம் திரும்பப் பெற்றுக் கொள்கிறது.

நேற்று நாங்குநேரியில் நடைபெற்ற சம்பவத்தின்போது பேருந்து நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுப்பதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது." எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பேருந்துகளுக்கு அபராதம்

இந்த நிலையில், சென்னை - புதுச்சேரி பேருந்து தாம்பரத்தில் 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக தாம்பரம் போக்குவரத்து காவல் போலீசார் 1000 ரூபாய் அபராதம் விதித்தனர். தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் ஒரு பேருந்திற்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் நோ பார்க்கிங்-ல் நிறுத்தப்பட்ட அரசு பேருந்திற்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிக பயணிகளை ஏற்றி வரும் அரசு பேருந்துகளுக்கும் போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். பேருந்து நிறுத்தம் இல்லாத பகுதிகளில் நிறுத்தி பயணிகளை ஏற்றினாலும் அபராதம் விதிக்கப்படுகிறது.

இதேபோல் சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. நேற்று இரவு முதல் விதி மீறும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் பணி தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்த நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், தமிழகம் முழுவதும் விதிகளை மீறும் அரசுப் பேருந்துகளுக்கு போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

போலீஸ் vs போக்குவரத்து துறை?

அரசுப் பேருந்தில் டிக்கெட் எடுக்காமல் அரசு போக்குவரத்து நடத்துநருடன் வாக்குவாதம் செய்த, காவலர் ஆறுமுகபாண்டி மீது நடவடிக்கை எடுக்க போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்த நிலையில், தற்போது 'நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையை போக்குவரத்து காவல் துறையினர் மேற்கொண்டுள்ளனர். இனி வரும் காலங்களில் இந்த நடவடிக்கை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இருதுறைகளுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி