Nainar: நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியரிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் - பாஜக நிர்வாகிக்கு சம்மன்
Apr 14, 2024, 10:35 AM IST
Nainar Nagendran: நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் , பாஜக நிர்வாகி கோவர்த்தனனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
Nainar Nagendran: கடந்த வாரம் தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில், சென்னை அபிராமபுரம் பகுதியைச் சார்ந்த பா.ஜ.க.வின் தொழில்துறை பிரிவு தலைவரான கோவர்த்தனுக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
தாம்பரம் ரயில் நிலையத்தில் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் உள்ளிட்ட மூவரிடம் ரூ.4 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. கடந்த வாரம் நெல்லை சென்ற விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர், தாம்பரம் காவல்துறையினர் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து சோதனை நடத்தினர். அந்த சோதனையில் 4 கோடி ரூபாய் பணத்தைப் பறிமுதல் செய்தனர். விசாரணையில், அந்த பணம் பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரனின் ஹோட்டலில் இருந்து கொண்டு வரப்பட்டது என்றும், அதில் இருவர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் என்றும், மூன்றாவது நபர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஹோட்டல் ஊழியர்கள் இருவரில் ஒருவர், ஹோட்டல் மேலாளர் சதீஷ் என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நயினார் நாகேந்திரனுக்குச் சொந்தமான ஹோட்டல் மற்றும் பல்வேறு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி விசாரணை செய்தனர். அதுமட்டுமல்லாமல் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது எனவும் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் இந்தப் பணம், சென்னை அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுமை வழிச்சாலையில் உள்ள ஒரு உணவு விடுதியில் இருந்து பெரும்பகுதியான பணம் கைமாறியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த உணவு விடுதி இருக்கும் கட்டடமானது பாஜகவின் தொழில் பிரிவு தலைவர் கோவர்த்தனனுக்கு சொந்தமானது எனக் கூறப்படுகிறது. அதுதொடர்பாக அங்கும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டு ரூ.1 லட்சம் மதிப்பிலான பணத்தைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்தப் பணம் தொடர்பாக, விசாரிக்க பாஜகவின் தொழில்துறை பிரிவு தலைவரான கோவர்த்தனனுக்கு தாம்பரம் மாநகர காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது. அவரிடம் இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, யார் மூலமாக வந்தது, யாருக்காக அனுப்பப்பட்டது என்பது தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படயிருக்கிறது.
அதேபோல்,பாஜக நிர்வாகி நயினார் நாகேந்திரனுக்கும் சம்மன் அனுப்பி விசாரிக்க தாம்பரம் காவல்துறை முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன. அன்று முதல் தமிழ்நாட்டில் கட்சித் தலைவர்களின் சிலைகள் துணிகள் போர்த்தி மறைக்கப்பட்டன. தேர்தல் பறக்கும் படையினர் ரூ. 50ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லும் பணத்தைக் கைப்பற்றி, தமிழ்நாடு முழுக்க விசாரணை நடத்தி வருகின்றனர். பணப்பட்டுவாடாவை தடுக்கவே இந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக, இந்தியத் தேர்தல் ஆணையம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது.
இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியும், அதிமுக தலைமையிலான ஒரு கூட்டணியும் தான் பிரதானக் கூட்டணிகள் எனப் பலரும் நினைத்த நிலையில், பாஜக மூன்றாவது பெரும் கூட்டணியை தமிழ்நாட்டில் உருவாக்கியுள்ளது. அதன்படி, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக 19 இடங்களிலும், பாமக 10 இடங்களிலும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மூன்று இடங்களிலும், அமமுக இரண்டு இடங்களிலும் போட்டியிடுகின்றனர். தவிர, பாஜக ஆதரவுடன், ஓ.பன்னீர்செல்வம், தேவநாதன், ஜான் பாண்டியன், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம் ஆகியோர் தலா ஒரு இடத்தில் நிற்கின்றனர்.
டாபிக்ஸ்