Nainar Nagendran: தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக போட்டி? - நயினார் நாகேந்திரன் சூசகம்!
Mar 03, 2024, 08:04 AM IST
பாஜக மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.
மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கான பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரப்படுத்தி வருகின்றன. தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்களை இறுதி செய்யும் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுத்தியுள்ளன. தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில் தமிழ்நாட்டிலும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுக தங்களுடைய கூட்டணிக் கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. அதேபோல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சிக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், காங்கிரஸ், மதிமுக, விசிக ஆகிய கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவும் தேமுதிக, புதிய தமிழகம் கட்சி, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
இதற்கிடையில், பாஜக மற்றும் தமாகா இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோர் தமாகா தலைவர் ஜி.கே.வாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நேற்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனுடன், தமிழக பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். சென்னை சூளைமேட்டில் உள்ள ஜான் பாண்டியன் இல்லத்தில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், "தமிழகம் முழுவதும் மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். தமிழகத்தில் 25 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடும். திருநெல்வேலி தொகுதியில் என்னை வேட்பாளராக நிறுத்தினால் நிற்பேன்." எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்