மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரம் முன் ஜாமின் கோரி நெல்லை எம்.பி மனு
Jun 27, 2023, 07:19 PM IST
எம்.பி ஞான திரவியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு செய்துள்ளார். இந்த ஜாமின் மனு வரும் ஜூன் 30 தேதி விசாரணைக்கு எடுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
தூத்துக்குடியில் தென்னிந்திய திருச்சபையில் நடந்த கைகலப்பு விவகாரம் சூடு பிடித்துள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய நெல்லை எம்.பி ஞான திரவியம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் மாவட்ட நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு செய்துள்ளார். இந்த ஜாமின் மனு வரும் ஜூன் 30 தேதி விசாரணைக்கு எடுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்படுள்ளது.
முன்னதாக பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி தாளாளர் மற்றும் திருமண்டல மேல்நிலைப்பள்ளி நிலைக் குழு உறுப்பினர் பதவியில் இருந்து ஞானதிரவியத்தை நீக்கி, தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த நெல்லை திருமண்டல பிஷப் உத்தரவிட்டிருந்த நிலையில், புதிய தாளாளர் - ஞானதிரவியம் தரப்பினர் இடையே மோதல் நடைபெற்றது.
பேராயருக்கு எதிர்ப்பு தெரிவித்து, நெல்லை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்தில் சில அறைகளை பூட்டு போட்டு பூட்டி சென்றனர். எனவே அந்த அறைகளை திறக்க வேண்டும் அலுவலக பணிகளை முடக்க கூடாது என்று பேராயர் தரப்பினர் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் இட்டேரி பகுதியை சேர்ந்த மதபோதகர் காட்பிரே நோபில் என்பவர் நேற்று காலை பாளையங்கோட்டையில் உள்ள சி.எஸ்.ஐ திருமண்டல அலுவலகத்திற்கு சென்றார். அவர், திருமண்டல அலுவலகம் பூட்டி வைப்பதால் பணிகள் பாதிக்கப்படுவதாக கூறியும் எனவே உடனடியாக திருமண்டல அலுவலகத்தை திறக்க வேண்டும் என்றும் அங்கிருந்தவர்களிடம் கூறினார்.
அப்போது சுமார் 200க்கும் மேற்பட்டோர் குவிந்த திமுக எம்.பி ஞானதிரவியத்தின் ஆதரவாளர்களில் திடீரென சிலர் காட்பிரே நோபிளை சரமாரியாக அடித்து உதைத்தாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனால் அவரை ஓட ஓட துரத்தி அங்கிருந்தவர்கள் ஆபாச வார்த்தையால் திட்டிக்கொண்டே தாக்கும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனது. அங்கிருந்து தப்பித்த காட்பிரே நோபில் தனது ஆதரவாளர்கள் உடன் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் தன்னை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளித்தார். இந்த விவகாரத்தில் ஜான் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதபோதகர் தாக்கப்படும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரல் ஆனதால் சம்பவ இடத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக திமுக எம்.பி ஞானதிரவியத்திற்கு திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இது தொடர்பாக ஞானதிரவியத்திற்கு கட்சித் தலைமை அனுப்பி உள்ள நோட்டீஸில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதி திமுக உறுப்பினர் சா.ஞானதிரவியம், கட்சி வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் - கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்படுவதாகவும் புகார்.
ஞானதிரவியத்தின் இச்செயல் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் உள்ளதால், இதுகுறித்த விளக்கத்தினையும் - செயல்பாடுகளையும் இக்கடிதம் கிடைத்த 7 நாட்களுக்குள் தலைமைக் கழகத்திற்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவிக்க தவறும்பட்சத்தில், ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரத்தில் தொடர்புடைய நெல்லை எம்பி ஞான திரவியம் உள்ளிட்ட 9 பேர் முன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளனர்.
டாபிக்ஸ்