Tamil Nadu: ’எகிறும் திமுக, பாஜக வாக்கு வங்கி! சரியும் அதிமுக!’ இந்தியா டுடே கருத்து கணிப்பு
Updated Feb 15, 2025 09:50 AM IST

வாக்கு சதவீதங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்கு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 5 சதவீதம் வரை உயர்ந்து 52 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றாலும் திமுக கூட்டணி 39 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என சி வோட்டர்ஸ் - இந்தியா டுடே நிறுவனங்கள் கருத்து கணிப்பை வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாட்டில் உயரும் திமுக வாக்கு சதவீதம்
இந்தியா டுடே-சிவோட்டர் ஆகிய நிறுவனங்கள் இணைந்து ’மூட் ஆஃப் தி நேஷன்’ என்ற பெயரில் கடந்த ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 9ஆம் தேதி வரை நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களவை தொகுதிகளிலும் கருத்து கணிப்புகளை நடத்தின. வாக்கு சதவீதங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வாக்கு விகிதம் கடந்த ஆண்டை காட்டிலும் தற்போது 5 சதவீதம் வரை உயர்ந்து 52 சதவீதமாக அதிகரித்து உள்ளது.
சரிவில் அதிமுகவின் வாக்கு வங்கி
2024 நாடாளுமன்றத் தேர்தலில் 18 சதவீத வாக்குகளை பெற்று இருந்த பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்குகள் அதிகரித்து 21 சதவீதமாக அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவின் வாக்குக 23 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக சரிந்து உள்ளது. தற்போது மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற்றால் அதிமுக, பாஜக கூட்டணிகளை வீழ்த்தி திமுக கூட்டணி 39 தொகுதிகளையும் வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக 22 இடங்களை வென்றது. காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன.
முக்கியத்துவம் பெறும் விஜய் கட்சி
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் அமைப்பை தொடங்கி அடுத்தாண்டு வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தயாராகி வருகிறார். பாஜக, அதிமுக மற்றும் விஜய்யின் கட்சிகள் இணைந்து பெரிய கூட்டணியை கட்டமைத்தால் மட்டுமே திமுக கூட்டணிக்கு வலுவான போட்டியை ஏற்படுத்த முடியும் என அரசியல் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.