அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை - அமைச்சர் பொன்முடி
Apr 08, 2022, 03:54 PM IST
அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆவது அமர்வு ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கியது. துறைவாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பூந்தமல்லி தொகுதியில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரியை தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, "பூந்தமல்லி தொகுதியில் 3 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளும், 1 அரசு உதவி பெறும் கலை, அறிவியல் கல்லூரியும், 33 சுயநிதி கலை, அறிவியல் கல்லூரிகளும் உள்ளன.
பூந்தமல்லி தொகுதியில் உள்ள அரசு கல்லூரிகளில் இருக்கும் காலியிடங்களில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தொகுதியின் எம்.எல்.ஏ. முயற்சி எடுக்க வேண்டும். ஏற்கனவே மாநிலம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் 25 விழுக்காடு இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஒரு அரசு கலை, அறிவியல் கல்லூரி கூட இல்லாத தொகுதிகள் நிறைய உள்ளன.
எனவே அரசு கல்லூரியே இல்லாத தொகுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு புதிய கல்லூரிகள் தொடங்கப்படும். பிற தொகுதிகளில் புதிய கல்லூரிகளை தொடங்குவது பற்றி பின்னர் முடிவு செய்யப்படும்" என்றார்.
டாபிக்ஸ்