Savukku Shankar: 'முதலமைச்சரை ஒருமையில் பேசியதை ஏற்க முடியாது'.. சவுக்கு சங்கர் வழக்கில் நீதிமன்றத்தில் நடந்தது என்ன?
May 23, 2024, 07:29 PM IST
Savukku Shankar: வரும் காலத்தில் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய சவுக்கு சங்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
எதிர்காலத்தில் எப்படி நடந்துகொள்வார், என்னவெல்லாம் செய்யமாட்டார் என பட்டியலிட்டு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய யூடியூபர் சவுக்கு சங்கர் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் (மே 24) வெள்ளிக்கிழமை இறுதி விசாரணை நடைபெறும் என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டது ஏன்?
பெண் காவலர்களை இழிவாகப் பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக, வீடியோவை யூடியூப் சேனலில் வெளியிட்ட ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் தேனியில் வைத்து சவுக்கு சங்கர் கைது செய்யப்படும்போது அவரது காரில் இருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தேனி போலீஸார் தனியாக ஒரு வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாகக் கூறி சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து, சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே 12-ம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
ஆட்கொணர்வு மனு
இந்த உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்கக் கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதில், போலீசார் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் எனது மகன் மீது அடுத்தடுத்து பல்வேறு வழக்குகளை சட்டவிரோதமாக பதிவு செய்து, ஒவ்வொரு நீதிமன்றமாக ஆஜர்படுத்தி வருகின்றனர். காவல் துறையால் தாக்கப்பட்டதால் கை மற்றும் பல்வேறு இடங்களில் காயம் அடைந்துள்ள எனது மகனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படவில்லை. போலீஸாரால் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக எனது மகன் பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார். எனவே, எனது மகனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதமானது. எனவே, அதை ரத்து செய்ய வேண்டும்." என மனுவில் கோரியிருந்தார்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த மனுவை இன்று (மே 23) காலை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், மற்றும் பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்து பிறப்பித்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களையும் இன்று பிற்பகல் 2:15 மணிக்குள் தாக்கல் செய்ய சென்னை காவல் ஆணையருக்கு உத்தரவிட்டது.
மீண்டும் விசாரணை
அதன்படி இந்த வழக்கு, பிற்பகலில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகர காவல் ஆணையர் தரப்பில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைத்த உத்தரவு தொடர்பான அனைத்து அசல் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்களை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கை நாளை (மே 24) விசாரிப்பதாகக் கூறி விசாரணையை தள்ளிவைத்தனர்.
கோவை சிறையில் தாக்கப்பட்டதாக புகார்
கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்தும்படி தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி அவரது தாயார் கமலா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்த மனு மீதான விசாரணையையும் (மே 24) நாளைக்கு தள்ளி வைத்தனர்.
பிரமாணப் பத்திரம்
எதிர்காலத்தில் சவுக்கு சங்கர் எப்படி நடந்து கொள்வார்? என்னவெல்லாம் செய்யமாட்டார் என்பதற்கு உத்தரவாதம் அளித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழ்நாடு முதல்வரை ஒருமையில் அழைத்திருப்பதை ஏற்க முடியாது என்றும் கருத்து தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்