TOP 10 NEWS: ’சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 இளைஞர்கள் கொலை! பாஜக மீது முதல்வர் விமர்சனம்!’ டாப் 10 நியூஸ்!
Updated Feb 15, 2025 02:01 PM IST

ஈபிஎஸ் மீது மு.க.ஸ்டாலின் விமர்சனம், சாராய விற்பனையை தட்டிக் கேட்ட 2 இளைஞர்கள் கொலை, காசி தமிழ்ச்சங்கம் இன்று தொடக்கம், இந்து முன்னணியினர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று காலை வரை நடைபெற்ற முக்கிய செய்திகளின் தொகுப்பு இதோ!
1.ஈபிஎஸ் பாஜகவின் குரல்
எடப்பாடி பழனிசாமியின் அறிக்கைகள் பாஜக அறிக்கையை போல் இருக்கின்றன, ஈபிஎஸ் குரலே பாஜகவின் ‘டப்பிங்’ குரல்தான் என முதலலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்.
2.மத்தியில் உள்ளவர்களுக்கு மனசாட்சி உள்ளதா?
மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டை முழுவதும் புறக்கணித்து உள்ளனர். சில ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்கு எந்த நிதியும் இல்லை. பெயரையும் சொல்வது இல்லை. சிறப்பாக தமிழ்நாடு செயல்படுவதாக புள்ளி விவரங்களுடன் மத்திய அரசே அறிக்கை வெளியிடுகிறது. மத்தியில் உள்ளவர்களுக்கு மனசாட்சி உள்ளதா என கேட்கத் தோன்றுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
3.காசி தமிழ்ச்சங்கம் இன்று தொடக்கம்
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச்சங்கமம் நிகழ்ச்சியை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இன்று தொடங்கி வைக்கிறார்.
4.சாராய விற்பனையை தட்டிக்கேட்ட 2 பேர் கொலை
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் சாராய விற்பனயை தட்டிக் கேட்ட கல்லூரி மாணவன் ஹரிசக்தி மற்றும் ஹரிஷ் ஆகிய இருவரும் சாராய வியாபாரிகளால் படுகொலை செய்யப்பட்டனர். சாராய வியாபாரி ராஜ்குமார், தங்கதுரை ஆகிய 2 பேர் கைதான நிலையில், மூவேந்தன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
5.மாணவர்கள் போக்சோவில் கைது
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரையில் உள்ள அரசுப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 3 மாணவர்கள் போக்சோவில் கைதான நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்பட்டனர்.
6.இந்து முன்னணியினர் கைது
சிவகங்கையில் காதலர் தினத்திற்காக பேக்கரியில் அறிவித்த சலுகையை எதித்து கடைக்கு வருபவர்களுக்கு திருமணம் செய்து வைப்போம் என தாலியுடன் வந்த இந்து முன்னணி பொறுப்பாளர்கள் 5 பேர் கைது.
7.தலைமறைவு குற்றவாளி கைது
சென்னை வியாசர்பாடி எம்கேபி நகரில், தலைமறைவாக இருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி அன்பழகன் என்ற ரவுடி கரிமேடு அன்பு கைது. இவர் மீது 16 குற்ற வழக்குகள் உள்ளன.
8.வங்கதேசத்தினரிடம் விசாரணை
ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெருந்துறை பகுதியில் வட மாநில நபர்களுடன் சட்ட விரோதமாக குடியேறிய ஏராளமான வங்கதேசத்தினர் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
9.ஆசிரியர் போக்சோவில் கைது
புதுச்சேரி யூனியன் பிரதேசம், தவளக்குப்பத்தில் உள்ள தனியார் பள்ளியில் 1ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் போக்சோவில் கைது. சிறுமியின் உறவினர்கள் பள்ளியை சூறையாடியதால் பரபரப்பு.
10.ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கேள்வி
"ஆளுநரின் சட்டவிரோத, அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகள் உச்ச நீதிமன்றத்தால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது குறித்த ’இந்து ஆங்கில நாளிதழ்’ கட்டுரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது x பக்கத்தில் முன்னிலைப்படுத்தியதில் என்ன தவறு? என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி.