டிஜிட்டல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகள் படிப்பவர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு
Aug 07, 2022, 04:05 PM IST
இந்தியாவில் 2027க்குள் 5ஜி, 6ஜி தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட உள்ளதால் 5 லட்சம் இன்ஜினியர்கள் தேவை உள்ளது. இதனால் எலக்ட்ரானிக்ஸ் துறையில் டிஜிட்டல் தொழில்நுட்ப பாடங்களை மாணவர்கள் படித்தால் அதிக ஊதியத்துடன் கூடிய பணிக்கு செல்லலாம்'' என தேனியில் நடந்த வேலைவாய்ப்பு ஆலோசனை நிகழ்ச்சியில் ஆலோசனை வழங்கப்பட்டது.
தேனி: அன்னப்பராஜா திருமண மஹாலில் தினமலர், சென்னை இன்ஸ்டிடியூட் ஆப்
டெக்னாலஜி இணைந்து நடத்தும் 'உங்களால் முடியும்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன், கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி, சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்களின் தலைவர் பா.ஸ்ரீராம், கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ் நிர்வாகப் பிரிவு தலைவர் ஜி.சுப்புராஜ் குத்துவிளக்கு ஏற்றி துவக்கினர்.
நிகழ்ச்சியில் பொறியியல் தொழில் வாய்ப்புக்கள் குறித்து கற்பகம் இன்ஸ்டிடியூசன்ஸ் நிர்வாகப்பிரிபின் தலைவர் ஜி.சுப்புராஜ் பேசியதாவது: கல்லுாரிகளை தேர்ந்தெடுப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பதில் தனி கவனம் அவசியம். ஏனெனில் இது எதிர்காலத்தை தேர்ந்தெடுக்கும் தருணம். அது கவுன்சிலிங் நடைமுறைகளை பின்பற்றுவதில்தான் துவங்குகிறது. கவுன்சிலிங் நடைமுறைகளை முறையாக கற்று, கல்லுாரிகளையும், பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுங்கள், என்றார்.
புதிய முறை அறிமுகம்
'சாய்ஸ் பில்லிங், கம்யூனிட்டி ரேங்கிங், பொது ரேங்கிங் வேறுபாடுகள், கவுன்சிலிங்கின் புதுமை அம்சங்கள், கல்லுாரி சேர்க்கை குறித்து கோவை அரசு தொழில்நுட்பக் கல்லுாரி துணை முதல்வர் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது: ஆகஸ்ட் 22ல் நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க 2 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1.20 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பில் குளறுபடியை தவிர்க்க அனைத்து சான்றிதழ்களையும் ஒரே கோப்பாக ஸ்கேன் செய்து பதிவேற்றுவது சிறந்தது. பின் பொது ரேங்கிங், கம்யூனிட்டி ரேங்கிங் வழங்கப்படும்.
மாணவர்கள் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்க tneaonline.org என்ற இணையத்தில் பாடப்பிரிவிற்கு எந்த கல்லுாரி, கல்லுாரியின் கலந்தாய்வு எண் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை மாணவர்கள் தெரிந்து குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். சாய்ஸ் ஆக பிற கல்லுாரிகளை பதிவு செய்ய வேண்டும்.
தமிழக அரசின் உயர்கல்வித்துறை, ஏ.ஐ.சி.சி.டி., ஐ.ஐ.டி., பேராசிரியர்கள் இணைந்து இன்ஜினியரிங் சேர்க்கையில் காலியிடங்கள் அதிகரிப்பதை குறைக்க ஆய்வு நடந்தது. அதன் முடிவு நடப்பாண்டு கலந்தாய்வில் அறிமுகமாகி உள்ளது. புதிய திட்டமாக 'கட் ஆப்' மதிப்பெண் அடிப்படையில் பாடப்பிரிவுக்கான கல்லுாரி தேர்ந்தெடுக்கப்பட்ட பின், 7 நாட்களுக்குள் கட்டணம் செலுத்த தவறினால் அந்த இடம் காலியிடமாக கருதப்படும். பின் தரவரிசையில் அடுத்த இடத்தில் உள்ள மாணவருக்கு வாய்ப்பு வழங்கப்படும். ஒதுக்கீட்டுக்கான கடிதம் பெற்றவுடன் ஏழு நாட்களுக்குள் கல்லுாரியில் கட்டணம் செலுத்தி சேர வேண்டும். அந்த நாட்களுக்குள் சேரவில்லை எனில் தன்னிச்சையாகவே ஒதுக்கீடு ரத்தாகிவிடும், என்றார்.
5 லட்சம் பொறியாளர்கள் தேவை
சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தலைவர் பா.ஸ்ரீராம் பேசியதாவது: இந்தியாவில் 2027க்குள் 5ஜி, 6ஜி தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட உள்ளதால் 5 லட்சம் இன்ஜினியர்கள் தேவை. எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுடன் இணைந்த டிஜிட்டல் தொழில்நுட்ப பிரிவுகளை படித்தால் அதிக ஊதியம் பெறும் வேலை வாய்ப்பு கிடைக்கும். குறிப்பாக டி.சி.எஸ்., ஆண்டிற்கு 30 ஆயிரம் இன்ஜினியர்களை பணிக்கு எடுத்தால், அதில் கோர் இன்ஜினியரிங் படிப்பு முடித்த 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் பேருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இதுபோன்ற பாடப்பிரிவுகளை கற்றுத்தரும் கல்லுாரிகளை தேர்வு செய்து படிப்பது நல்லது. சீனா, ரஷ்யாவில் 5ஜி, 6 ஜி தொழில்நுட்பம், சைபர் செக்யூரிட்டி குறித்த தொழில்நுட்பம் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இனிவரும் காலங்களில் இதற்கான தேவை அதிகரிக்கும், என்றார்.
'லீட் கோட்' கற்றால் பணி வாய்ப்பு
கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ்காந்தி பேசியதாவது: உலகளாவிய டிஜிட்டல் யுகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்களை தேர்ந்தெடுக்க 'சாய்ஸ்' எலக்ட்ரானிக்ஸ் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுப்பது சிறந்தது. டேட்டா அறிவியல், டேட்டா ஸ்கிராபிங், வெப் ஸ்கிராபிங் தொழில்நுட்பங்கள் முன்னோடியாக உள்ளன. குறிப்பாக 'லீட் கோட்' பாடப்பிரிவுகளுடன் டிஜிட்டல் தொழில்நுட்ப பாடப்பிரிவுகளை படித்தால் அதிக வேலை வாய்ப்புக்கள் உள்ளன. 2022ல் கல்லுாரியில் நுழைந்து 2026ல் வெளிவரும் போது டிஜிட்டல் யுகத்தால் தொழில்நுட்பம் மேம்பட்டிருக்கும். அதற்கேற்ற வகையில் பொறியியல் திறன் பெற்றிருந்தால் வெற்றி பெறலாம். கலந்தாய்வில் சுயநிதி கல்லுாரிக்கான ஒதுக்கீட்டுக்கான கட்டணம் செலுத்திய பின், பின் ஒதுக்கீட்டில் அரசு கல்லுாரியில் இடம் கிடைத்தால் மீதிப்பணம் மாணவர்களுக்கு திருப்பி வழங்கப்படும், என்றார்.
மாணவர்கள், பெற்றோர்களின் கேள்விகளுக்கு கல்வியாளர்கள் விளக்கம் அளித்தனர்.
டாபிக்ஸ்