Lady attacked: இளம் பெண் மீது தாக்குதல்! காவல் ஆய்வாளர் உள்பட 5 பேர் மீது வழக்கு
Oct 28, 2022, 11:49 PM IST
இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது மயிலாடுதுறை காவல்துறையினர் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்பட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை தாலுகா செருதியூர் மேலத்தெருவை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது மகள் அபிராமி (25). இவர் மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்பு தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன்-புஷ்பவல்லி தம்பதியினரின் மகன் வினோத்குமார் என்பவரை 2017ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார்.
அதன்பின்னர், கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி மற்றும் குடும்பத்தினர் அபிராமியை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், வினோத்குமாரை பிரிந்து, சென்னை சென்று அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் அபிராமி வேலை பார்த்து வந்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் குஞ்சிதபாதம் நகரில் உள்ள தனது தந்தையின் நண்பரின் வீட்டுக்கு வந்து அபிராமி தங்கி இருந்துள்ளார். இதுபற்றி தகவலறிந்த வினோத்குமார் கடந்த 24ஆம் தேதி தனது தாய் புஷ்பவல்லியின் நண்பரான காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக், மகள் திவ்யா என 5 பேர் அங்கு சென்று அபிராமியை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து தன் மீதான தாக்குதல் தொடர்பாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அபிராமி அளித்தார். இதன் பேரில் 5 பேரின் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் விசாரணை நடத்தி வருகிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் ராதாகிருஷ்ணன் தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளார்.
டாபிக்ஸ்