தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Jayalalithaa: ஜெயலலிதாவின் நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு! கால் நூற்றாண்டுகளுக்கு பின் தமிழகம் வருகிறது!

Jayalalithaa: ஜெயலலிதாவின் நகை, சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைப்பு! கால் நூற்றாண்டுகளுக்கு பின் தமிழகம் வருகிறது!

Kathiravan V HT Tamil

Updated Feb 15, 2025 04:18 PM IST

google News
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் சொத்துக்களை தன்னிடம் வழங்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் சொத்துக்களை தன்னிடம் வழங்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.

சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நகை மற்றும் சொத்துக்களை தன்னிடம் வழங்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து இருந்தது.

சொத்து குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்துக்கள் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டன. 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக 1996ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது. அப்போது அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் 11,344 புடவைகள், 750 காலணிகள், 91 கை கடிகாரங்கள், 28 கிலோ மதிப்பிலான தங்கம், வைர நகைகள், 700 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு, கர்நாடக சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டதால் , பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் அனைத்தும் கர்நாடக மாநில கருவூலத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு தண்டனை!

இந்த வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி எனவும், அவர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வெளி வந்த போது ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்டதால், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டன.

நீதிபதிகள் விதித்த நிபந்தனை!

மேலும் இவர்களுக்கு 100 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அதனை ஈடுகட்ட கைப்பற்றப்பட்ட நகைகளை ஏலம் விட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் நகை மற்றும் கைப்பற்றப்பட்ட பொருட்களை ஏலம் விடக்கோரி ராமமூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் பொருட்களை கர்நாடக அரசு ஏலம் விடுதற்கு பதில் தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது. இதற்கான பொருட்களை பெற தமிழக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும், பொருட்கள் பெற்று செல்வதை பதிவு செய்ய வீடியோ, போட்டோ கிராப்பர்கள் அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை நீதிபதிகள் விதித்து இருந்தனர்.

ஜெ.தீபா வழக்கு!

இந்த நிலையில் இந்த சொத்துக்கள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழ்நாடு அரசிடம் இந்த பொருட்களை ஒப்படைக்க இருந்த நிலையில், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அதில் இந்த சொத்து எங்களுக்கானது என கோரினர். வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதித்து இருந்தது. பின்னர் ஜெ.தீபாவின் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடியும் செய்தது. 

உச்சநீதிமன்றம் சென்ற ஜெ.தீபா

கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஜெ.தீபா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். மரணம் காரணமாக உச்ச நீதிமன்ற நடவடிக்கைகள் கைவிடப்பட்டதால், ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார் என்று அர்த்தமல்ல என்று கூறி ஜெ.தீபாவின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

நகை மற்றும் சொத்துக்கள் ஒப்படைப்பு 

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தங்கம், வைரம், வைடூரியத்தால் ஆன 27 கிலோ நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. மேலும், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜெயலலிதாவின் 1,526 ஏக்கர் சொத்து ஆவணங்களும் ஒப்படைக்கப்பட்டன.

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.