Tamilisai About Jayalalitha: ’கரசேவையை ஆதரித்த ஜெயலலிதா இந்துத்துவ தலைவர்தான்!’ தமிழிசை சௌந்தராஜன் விளாசல்!
May 27, 2024, 05:25 PM IST
ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்தான். குடமுழுக்கு நடத்துவது, கர சேவகர்களுக்கு பாராட்டு தெரிவித்தது, கரசேவைக்காக பாஜக ஆட்சி கலைக்கப்பட்டபோது தவறு என்று சொன்னது, ராமர் கோயில் தேவை என்று தொண்டர்களிடம் கையெழுத்து பெற்றது போன்ற செயல்களை அவர் செய்துள்ளார்
தென் சென்னை தொகுதியின் பாஜக வேட்பாளரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.
வெற்றிக்கு தேவையான இடங்களில் வென்றுவிட்டோம்
அப்போது பேசிய அவர், பாஜகவினர் மிகுந்த உற்சாகமாக உள்ளார்கள். வரும் ஜூன் 4ஆம் தேதி மத்தியிலும், தமிழ்நாட்டிலும் பாஜகவுக்கு மிகப்பெரிய வெற்றி காத்திருக்கிறது. பாரத பிரதமர் மோடி அவர்கள் மீண்டும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எங்கள் தலைவர்கள் சொல்வதை போல், அரிதிப் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை நாங்கள் தாண்டிவிட்டோம்.
மாநிலத்தை பிரித்து ஆள்வது யார்?
ஆனால் மரியாதைக்குரிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், ஏதோ மூன்றாம் தேதியே அவர்கள் வெற்றியை கொண்டாடுவது போலவும், மதவாதத்தால் பிரித்து ஆள்வது போலவும் கூறி வருகிறார். இந்த மாநிலத்தில் வேற்றுமையை உருவாகியதில் அவர்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.
எல்லா மத பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்லும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏன் இந்துக்கள் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்ல மறுக்கிறீர்கள். யார் பிரித்து ஆண்டு அரசியல் ஆக்கி கொண்டு இருக்கிறீர்கள் என்ற கேள்வியை நாங்கள் வைத்து வருகிறோம்.
பிரதமர் மாநிலவாரியாக பிரித்து ஆளுகிறார், அவர் தமிழ்நாட்டுக்கு எதிராக உள்ளதாக மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் பிரதமர் மோடி அவர்கள் எப்போதும் போல் தமிழ் மக்கள் மீதும், தமிழ் மீதும் மிகுந்த அக்கறை கொண்டு இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. திமுக கூட்டணி கட்சிகள் பொய் பிரச்சாரத்தை செய்கிறார்கள். ஆனால் வரும் ஜூன் 4ஆம் தேதி அதற்கான பதில் வரும்.
ஸ்டாலின் சொல்கிறார், ‘வரும் 4ஆம் தேதி மதவாதத்திற்கு எதிரான தீர்ப்பு வரும் என்று’, ஆனால் மதவாதமே இங்கு இல்லை, மனித வாதம்தான் இருக்கிறது. மனிதர்களை மனிதர்களாக மதித்து அவர்களுக்கு உரிய அத்தனை திட்டங்களையும் பிரதமர் மோடி நிறைவேற்றி உள்ளார்.
பிரித்தாளும் அரசியல் ஸ்டாலின் போன்றவர்களால் செய்யப்படுகிறது. தோல்வி பயத்தில் பாஜக இருப்பது போன்ற தோற்றத்தை இந்தி கூட்டணி ஏற்படுத்துகிறது.
4 கோடி ரூபாய் பிடிப்பட்ட விவகாரத்தில் பாஜகவினரிடம் சிபிசிஐடி விசரணை நடக்கிறதே?
4 கோடி பிடிபட்ட விவகாரத்தில் தொடர்பு இல்லை என்று தெளிவாக சொல்லப்பட்டு உள்ளது. இது அரசியல் காழ்புணர்வால் நடப்பதாக ஏற்கெனவே சொல்லி உள்ளோம்.
இட ஒதுக்கீட்டு விவகாரம் தொடர்பாக பிரதமரை எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றதே?
இட ஒதுக்கீடு விவகாரத்தில் பிரதமர் தெளிவாக பேசுகிறார். தென் சென்னையில் நிச்சயமாக வெற்றி கிடைக்கும், தாய் வீட்டுக்கு திரும்பி வந்த சகோதரி போல் நான் உள்ளேன்.
ஜெயலலிதா இந்துத்துவ தலைவர் என்று கூறி உள்ளதற்கு அதிமுக கண்டனம் தெரிவித்து உள்ளதே?
ஜெயலலிதா அவர்கள் இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர்தான். கோயில்களில் குடமுழுக்கு நடத்துவது, கர சேவகர்களுக்கு பாராட்டு தெரிவித்ததாகட்டும், பாஜக ஆட்சி கலைக்கப்பட்டபோது தவறு என்று சொன்னதாகட்டும், ராமர் கோயில் தேவை என்று தொண்டர்களிடம் கையெழுத்து பெற்றது ஆகட்டும். அவர் மிகபெரிய இந்துத்துவா தலைவர் ஆவார். ராமர் சேதுவுக்கு ஜெயலலிதா ஆதரவு தெரிவித்தார். அவர் இன்று இருந்து இருந்தால், ராமர் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட்டு இருப்பார். ஜெயலலிதா கரசேவயை ஆதரித்த போது அதிமுகவில் இருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்களா? ஸ்டாலின் அவர்கள் நேரம் காலம் பார்த்துதான் தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருவள்ளுவர் படம் காவியாக மாற்றபட்டதற்கு திமுக கண்டனம் தெரிவித்து உள்ளதே?
காவியாக இருந்த திருவள்ளுவரை அவர்கள் வெண்மை ஆக்கினார்கள், நாங்கள் இப்போது காவி ஆக்கி உள்ளோம்.