SDPI : மன்னிப்புக் கேட்க வேண்டும்.. கீழ்த்தரமான நிலைக்குப் பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம் - நெல்லை முபாரக்!
May 23, 2024, 07:15 AM IST
SDPI About PM Modi : இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி பிரச்சாரம் செய்துவந்த பிரதமர் மோடி, தற்போது தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தும், தமிழர்களைத் திருடர்கள் என்கிற ரீதியிலும் பிரச்சாரம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
முஸ்லிம்களைத் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிராகப் பிரதமர் மோடி அவதூறு வெறுப்புப் பிரச்சாரம் செய்து வருவதாக எஸ்டிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
வெறுக்கத்தக்க பேச்சுகள் மூலம் மத-இன ரீதியான வெறுப்பைத் தூண்டிவிடும் கீழ்த்தரமான நிலைக்குப் பிரதமர் இறங்கியிருப்பது நாட்டிற்கு அவமானம் எனவும் தெரிவித்துள்ளனர்.
தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம்
இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; “ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமருக்குப் பொருந்தாத வெறுப்பு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார் பிரதமர் மோடி. 10 ஆண்டுக்கால ஆட்சியின் தோல்வியை மக்களிடமிருந்து மறைக்கவும், தேர்தல் தோல்வி பயத்திலும், இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டி பிரச்சாரம் செய்துவந்த பிரதமர் மோடி, தற்போது தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தும், தமிழர்களைத் திருடர்கள் என்கிற ரீதியிலும் பிரச்சாரம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
ஒடிசாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் பொக்கிஷ அறையின் சாவிகள் காணாமல் போய்விட்டதாகவும், காணாமல் போன அந்த சாவி தமிழ்நாட்டில் உள்ளது எனவும் பேசியுள்ளார். இந்த அவதூறு பேச்சு தமிழர்கள் தான் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தின் சாவியைக் களவாடிச் சென்றுள்ளார்கள் எனச் சித்தரிக்கும் வகையில் உள்ளது. அதேபோல் உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஒடிசாவை ஒரு தமிழர் ஆள வேண்டுமா? பெருமைமிக்க இந்த மாநிலத்தை ஒரு தமிழர் வழிநடத்திச் செல்லலாமா? எனப் பேசியதாகச் செய்திகள் வெளியாயின. இந்த பேச்சு தமிழர்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டிவிடும் வகையில் உள்ளது.
தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்
தமிழகத்திற்கு வந்தால் தமிழர் அடையாளத்தையும், பாரம்பரியத்தை வலியுறுத்தும் அதேநேரத்தில், தனது அரசியல் நலனுக்காகத் தமிழர்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதுமான இதுபோன்ற நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள்முதல், செல்லுமிடமெல்லாம் வெறுக்கத்தக்கப் பேச்சுகள் மூலம் மத, இன ரீதியான வெறுப்பைத் தூண்டிவிடும் கீழ்த்தரமான நிலைக்குப் பிரதமரும்,நாட்டின் உள்துறை அமைச்சரும் சென்றிருப்பது நாட்டிற்கு அவமானமாகும். ஆகவே, தமிழர்களுக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்த பிரதமர் மோடியும், தமிழின வெறுப்பைத் தூண்டிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உடனடியாக தமிழக மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
தேர்தல் பிரச்சாரங்களில் வெறுப்பு பேச்சுகளை, மத-இன ரீதியான வெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்களைத் தடுத்து நிறுத்தி, தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய தேர்தல் ஆணையம், பிரதமர் மோடியின் தொடர் வெறுப்புப் பேச்சு விவகாரத்தில் மௌனம் சாதிப்பது கண்டிக்கத்தக்கது.
தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஆகவே, நாட்டின் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில், மதச்சார்பற்ற அரசமைப்புக் கட்டமைப்பின் மீது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் மத-இன ரீதியாக வெறுப்புப் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மீது தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்ட விதிகளின் மூலம் உடனடியாக அவர்கள் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm
டாபிக்ஸ்