‘கோட்டைக்கு வர செங்கோட்டையனை சுற்றி வருகிறார்கள்’ விமர்சனங்களுக்கு செங்கோட்டையன் பதிலடி!
Published Feb 12, 2025 09:03 PM IST

‘எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் கழகத்திற்காக பாடுபட்டவன் நான், என்னை சோதித்து பார்க்காதீர்கள். நான் தெளிவாக இருக்கிறேன். விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கிறேன். தலைவர்கள் வழியில் வந்தவன் நான்’
‘‘எத்தனையோ வாய்ப்புகள் என்னை தேடி வந்தன. அதை தவிர்த்து விட்டு கழகத்தின் ஒற்றுமைக்காக பாடுபட்டவன் நான், என்னை சோதிக்க வேண்டாம்,’ என, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த நல்ல கவுண்டம்பாளையத்தில் முன்னாள் முதல்வரும் அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர்.,யின் 108 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையின் பேசியதாவது:
‘என்னை சோதிக்காதீர்கள்..’
‘‘தடுக்கி விழுந்தால் தமிழ்நாட்டில், யார் எந்த ஊரில் உள்ளார்கள் என எனக்கு தெரியும். எம்.ஜி.ஆர்.,க்கு வந்த சோதனைகள் யாருக்கும் வந்திருக்காது. எதிர்கட்சி தலைவர்(எடப்பாடி பழனிசாமி) கட்டளையில் தான் இந்த கூட்டம் நடைபெறுகிறது. என்னை யாரும் சிக்க வைக்க முடியாது. நான் எத்தனை ஆண்டுகளில் அரசியல் உள்ளேன். என்னற்ற தலைவர்களை பார்த்துள்ளேன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய தெய்வங்களின் பாதையில் செல்லும் என்னை சோதிக்காதீர்கள்.
எல்லோரும் என்னன்னமோ நினைக்கிறார்கள். நான் சொன்னது இரண்டே வார்த்தை தான். ‘எம்.ஜி.ஆர் ஜெயலலிதா புகைப்படம் இல்லை. அவர்கள் புகைப்படம் இல்லாததால் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை,’ என்பதை தான் நான் சொன்னேன். அதைப்பற்றி தற்போது நிறை பேர் பேசி கொண்டுள்ளனர். அதைப்பற்றி எனக்கு கவலையில்லை. அதற்கு நான் பதில் அளிக்கவும் முடியாது.
எதிர்தரப்பில் இருந்து வரும் கருத்துக்கள்
எத்தனையோ வாய்ப்புகள் வந்த போதும் கழகத்திற்காக பாடுபட்டவன் நான், என்னை சோதித்து பார்க்காதீர்கள். நான் தெளிவாக இருக்கிறேன். விட்டு கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கிறேன். தலைவர்கள் வழியில் வந்தவன் நான். எதிர் தரப்பில் இருந்து நிறைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அதற்கு பதில் கூற முடியாது. சொன்னால் சிக்கல் ஆகிவிடும்.
காலையில் நான் மருத்தவமனைக்கு சென்றேன். உடல் பரிசோதனைக்காக சென்றேன். ஏதாவது கிடைத்தால், அதைப் போட்டு என்னையும் தூங்கவிடாமல், எதிர்கட்சியும் தூக்கவிடாமல் இருக்கப் பார்க்கின்றனர். காவல்துறையினர் பாதுகாப்பு நான் கேட்கவில்லை. அவர்களாக தான் கொடுத்தார்கள். கோட்டைக்கு ஒருவர் வரவேண்டும் என்றால் செங்கோட்டையனை சுத்தி வருகின்றனர்.
43 ஆண்டு ஆட்சியில் நான் யாரையும் தவறாக பேசியதில்லை, கோவப்பட்டது இல்லை. ஜெயலலிதா கை காட்டினால் என்ன செய்ய வேண்டும் எனக்குத் தெரியும். அப்புறம் ஏன் என்னை கழற்றி விட்டார் என நீங்கள் கேக்கலாம். அது வேறு, அதை சொன்னால் நிறைய பிரச்சனை வரும். (ஜெயலலிதா செங்கோடையனை பற்றி பேசியதை மேடையில் போட்டு காட்டுகிறார்)
நான் என்றைக்குமே என்னைத் தலைவன் என்று சொன்னது இல்லை, என்றைக்கு நான் தொண்டன் தான் என்று சொல்கிறேன். அதிலிருந்தே நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன்று மட்டும் எது பேசினாலும் கைதட்டால் வரும், ஆனால் நாளை வராது. எந்த மாநிலத்தின் முதல்வர் வந்தாலும் அந்த மாநிலத்தின் மொழியில் பேச கூடியவர் ஜெயலலிதா. மீண்டும் தமிழ்நாட்டில் தொண்டனாகவே இருந்து பாடுபடுவேன்,’’
எனக்கூறி பேச்சை நிறைவு செய்தார் செங்கோட்டையன்.