Sengottaiyan: ‘துரோகிகள் தான் காரணம்.. தொண்டனாக இருப்பேன்’ செங்கோட்டையன் அதிரடி பேச்சு!
Published Feb 13, 2025 10:00 PM IST

Sengottaiyan: ‘எதிர்க்கட்சி தலைவராக இருந்தால், என்ன இடர்பாடுகள் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கை காட்டிய இடத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் நாம்’
ஈரோடு மாவட்டம் அத்தானியில், அஇஅதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்புரையாற்றிய செங்கோட்டையன் பேசியதாவது:
‘‘1972 கட்சி தொடங்கியதில் இருந்து தொண்டனாக இருந்து பணியாற்றியவன் நான். இந்த முறை தோல்வியை தழுவியதற்க்கு காரணம் சில துரோகிகள். அவர்களை அடையாளம் காட்ட வேண்டும். ஒவ்வொரு தலைவர்களுக்கும் ஒரு வரலாறு இருக்கின்றது. அண்ணா திராவிடர் முன்னேற்ற கழகம் என பெயர் வைத்தால் மாநில கட்சிகள் கலைக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியது. அதைத்தொடர்ந்து அனைந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என பெயரை சேர்த்தார் எம்.ஜி.ஆர்.
எதிர்கட்சி தலைவராக இருந்தால்..
‘அனைந்திந்திய’ என்கிற பெயரை கட்சியின் முன்னாள் சேர்ப்பதற்கு கோவை செழியன் போன்றோர் எதிர்ப்பு கொடி காட்டினார். என்னை அடையாளம் காட்டியவர் எம்.ஜி.ஆர். பெரிய கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்தவர் எம்.ஜி.ஆர். எதிர்க்கட்சி தலைவராக இருந்தால், என்ன இடர்பாடுகள் வரும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் கை காட்டிய இடத்தில் நின்று வெற்றி பெற்றவர்கள் நாம்.
அதிமுகவை ஆட்சி கட்டில்..
இன்று படிக்க வரும் குழந்தைகளுக்கு ரூ.1000 வழங்குகிறார்கள். ஆனால், அனைவரையம் படிக்க வைத்ததே எம்.ஜி.ஆர் தான். நாம் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. என்னை பொருத்தவரையில் நான் தொண்டனாகவே இருக்க விரும்புகிறேன். தொண்டனாகவே இருந்து 2026 அதிமுகவை ஆட்சி கட்டில் அமர வைக்க பாடுபடுவேன்,’’
என்று அந்த பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.
முன்னதாக, அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், செங்கோட்டையனுக்கும் இடையே மனஸ்தாபம் இருப்பதாக கடந்த இரண்டு நாட்களாக பரவலான விமர்சனங்கள் எழுந்து வந்த நிலையில், நேற்று நடந்த மற்றொரு அதிமுக பொதுக்கூட்டத்தில், ‘அப்படி எதுவும் இல்லை’ என்கிற பாணியில் தான் செங்கோட்டையன் பேசியிருந்தார். இன்று நடந்த பொதுக் கூட்டத்திலும் அதே பேச்சையே தொடர்ந்திருக்கிறார் செங்கோட்டையன். இது அதிமுக அரசியல் களத்தில் நிலவி வந்த விமர்சனங்களை, பின்னுக்குத் தள்ளியுள்ளது.