Avaniyapuram Jallikattu: ஜல்லிக்கட்டில் கலகல.. திடீரென உள்ளே புகுந்து ஆட்டம் காட்டிய நாய் - வீடியோ
Jan 15, 2024, 12:46 PM IST
மதுரை, அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் தொடர்ந்து 3 நாட்கள் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
காலை 7 மணிக்கு துவங்கிய விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டில் 1,000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்கி உள்ளனர். இதையொட்டி, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிசிடிவி கண்காணிப்பு, ஆம்புலன்ஸ்கள், தற்காலிக அவசர சிகிச்சை மருத்துவமனைகள், கால்நடை மருந்தகங்கள், நடமாடும்கழிப்பறை மற்றும் தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு சுற்றிலும் தலா 50 மாடுபிடி வீரர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்றாக போட்டி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சுற்றிலும் சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்கள் இறுதி சுற்றில் பங்கேற்பர். சிறந்த காளை மற்றும் மாடுபிடி வீரருக்கு தலா ஒரு கார் என இரண்டு கார்கள் பரிசு வழங்கப்பட உள்ளது.
நான்காவது சுற்று முடிவில் இதுவரை 415 காளைகள் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டுள்ளது. 200 மாடுபிடி வீரர்கள் விளையாடியுள்ளனர். இதுவரை 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். 8 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடையே வாடிவாசல் பகுதியில் திடீரென ஒரு நாய் உள்ளே புகுந்தது. காவல்துறையினர் பலமுறை விரட்டியும் அந்த நாய் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் சிரிப்பழை ஏற்பட்டது.
மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளை காண திரண்டுள்ள வெளிநாட்டு, உள்நாட்டுப் பார்வையாளர்களால் மதுரை மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய மூன்று போட்டிகளிலும் சிறந்த காளை, சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் தலா ஒரு கார் என்ற அடிப்படையில் மொத்தம் 6 கார்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்