Rettaimalai Srinivasan: ’அம்பேத்கரின் மதம் மாறும் அழைப்பை இரட்டைமலை சீனிவாசன் நிராகரித்தது ஏன்?’
Sep 18, 2023, 04:45 AM IST
”தமிழகத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் இரட்டைமலை சீனிவாசன் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் இன்று வரை நினைவுக்கூறத்தக்கதாக உள்ளது”
சமூக நீதி மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாடுகளுக்கு எதிரான போராட்டத்தில், ரெட்டமலை சீனிவாசன் என்ற பெயர் அசைக்க முடியாத நிலைத்து நிற்கும் பெயராக உள்ளது.
அவரின் அர்ப்பணிப்பு மற்றும் இடைவிடாத உறுதிப்பாடு காரணமாக ஒதுக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்திற்காக வாதிடுவதற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். தமிழகத்தில் சமூக நீதிக்கான போராட்டத்தில் இரட்டைமலை சீனிவாசன் ஏற்படுத்திய ஆழமான தாக்கம் இன்று வரை நினைவுக்கூறத்தக்கதாக உள்ளது.
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
1859ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் நாள் பழைய செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்திற்கு அருகே உள்ள கோழியாளம் இன்ற சிற்றூரில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தார். சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் சமத்துவமின்மை ஆகியவற்றில் மூழ்கியிருந்த ஒரு சமூகத்தில் வளர்ந்த சீனிவாசன், விளிம்புநிலை சமூகங்கள் எதிர்கொள்ளும் இன்னல்களை நேரில் கண்டார். அவர் சந்தித்த இடையூறுகள் இருந்தபோதிலும், அவர் அதிகாரமளிப்பதற்கான வழிமுறையாக கல்வியைத் தேடுவதில் உறுதியாக இருந்தார்.
இடப்பெயர்வு
தொடக்க பள்ளி சேர்க்கையின் போது தனது தந்தையின் பெயரையும் சேர்த்ததால் அவரது பெயர் இரட்டைமலை சீனிவாசன் என்றானது. வறுமை மற்றும் சாதியக் கொடுமைகளால் சீனிவாசனின் குடும்பம் தஞ்சாவூருக்கு இடம்பெயர்ந்தது. அங்கு அதைவிட அதிகமாக சாதியக் கொடுமைகள் நிலவியதால் வேறு வழியின்றி அவரது குடும்பம் கோயமுத்தூருக்கு இடம்பெயர்ந்தது.
கோவையில் பள்ளிப்படிப்பை முடித்த சீனிவாசன், நீலகிரியில் ஆங்கிலேயர்கள் நடத்திய தொழில் நிறுவனம் ஒன்றில் எழுத்தர் பணிக்கு வேலைக்கு சேர்ந்தார். பத்தாண்டுகால பணிக்கு பிறகு 1890ஆம் ஆண்டு அவர் சென்னைக்கு இடம்பெயர்ந்தார்.
சமூக அநீதிக்கு எதிரான விழிப்பு
1891ஆம் ஆண்டில் ‘பறையர் மகாசன சபை’ என்ற அமைப்பை தோற்றுவித்த சீனிவாசன் அதனை பின்னர் ‘ஆதி திராவிட மகாசன சபை’ என பெயர் மாற்றினார். ‘பறையன்’ என்ற மாத இதழை நடத்திய இரட்டைமலை சீனிவாசன் 1900ஆம் ஆண்டு வேலைத்தேடி தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று நீதிமன்றத்தில் மொழிப்பெயர்பாளர் பணியை மேற்கொண்டார்.
சட்டமன்ற உறுப்பினராக நியமனம்
1920ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் இந்தியாவில் மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்த்திருத்தம் அமலானதால் மதராஸ் மாகாண சபைக்கு தலித் மக்களுக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது. 1921ஆம் ஆண்டில் இந்தியா திரும்பி இரட்டைமலை சீனிவாசன் 1923ஆம் ஆண்டில் சட்டசபை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
பொதுவீதிகளில் எல்லா சமூகமக்களும் சுந்தந்திரமாக நடமாடவும் ஆட்சேபணை இல்லை என்ற தீர்மானத்தை கொண்டு வந்தார். மதுவிலக்கு கோரி சட்டசபையில் உரையாற்றிய சீனிவாசன், மதுக்கடைகளால் அடித்தட்டு மக்கள் வருமானம் உறிஞ்சப்படுவதாக வாதிட்டார்.
மதம்மாற அழைப்பு
1930 முதல் 1931ஆம் ஆண்டு வரை லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொண்ட இரட்டைமலை சீனிவாசன், அம்பேத்கர் உடன் இணைந்து அடித்தட்டு மக்கள் விடுதலைக்காக பாடுபட்டார்.
1935ஆம் ஆண்டில் மதம் மாற அம்பேத்கர் அழைப்பு விடுத்தபோது “நான் இந்து மதத்தில் இல்லை; அவர்ணத்தாராக (வர்ணம் இல்லாதவர்) எனது சமூகம் உள்ளது. இந்துவாக இருந்தால்தானே மதம் மாற வேண்டும்” என்று கூறினார்.
மறைவு
இரட்டைமலை சீனிவாசனின் பணிகளை பாராட்டி ஆங்கிலேய அரசு ‘ராவ்சாகிப்’, ‘திவான்பகதூர்’ ஆகிய பட்டங்களை அளித்தது. தமிழ்த்தென்றல் திருவிக அவர்கள் ‘திராவிட மணி’ என்ற பட்டத்தை வழங்கினார். 1945ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி அன்று தனது 87ஆம் வயதில் இரட்டைமலை சீனிவாசன் இயற்கை எய்தினார்.
டாபிக்ஸ்