உங்களின் சீனியர் நான்! 100 ஆண்டுக்கு முன் நீதிக்கட்சி போட்டவிதை! சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முதல்வர் பேச்சு
Aug 06, 2023, 11:52 AM IST
“இந்தியாவில் தலைசிறந்த நூறு கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன”
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 165ஆவது பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த நிகழ்சியில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களுக்கு எனது வணக்கங்களையும் வாழ்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். பல்கலைக்கழக மானியக்குழுவானது சிறந்து விளங்கும் பல்கலைக்கழகம் என சிறப்பு அடைமொழியினை சென்னை பல்கலைக்கழகத்திற்கு வந்துள்ளது. அத்தகைய சிறப்பு வாய்ந்த பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வருகை தந்தது இந்த பல்கலைக்கழக வரலாற்றில் முக்கியமான நாளாக மாற்றி அமைத்துள்ளது.
இந்திய குடியரசுத்தலைவர்களாக இருந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், வி.வி.கிரி, நீலம் சஞ்சிவீ ரெட்டி, ஆர்.வெங்கட்ராமன், ஏபிஜே அப்துல்கலாம் என ஏராளமான குடியரசுத்தலைவர்கள் படித்த பல்கலைக்கழகம் சென்னை பல்கலைக்கழகம்.
நோபல் பரிசு பெற்ற சர்.வி.ராமன் படித்த பல்கலைக்கழகம் இது. நீதிபதிகள், அரசியல் தலைவர்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், முதல் பெண் மருத்துவர் முத்து லட்சுமி ரெட்டி உட்பட பல சிறந்த பெண் ஆளுமைகளை உருவாக்கிய பெருமை இந்த பல்கலைக்கழகத்திற்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைமகன் பேரறிஞர் அண்ணா இங்குதான் படித்தார். இன்று முதலமைச்சராக உள்ள நானும் இந்த பல்கலைக்கழகத்தில் படித்தவன்தான். அந்த வகையில் உங்கள் சீனியராகவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளேன்.
கடந்த 165 ஆண்டுகளாக தென்னிந்தியா மட்டுமில்லாமல் நவீன இந்தியாவின் வளர்ச்சிக்கும் நிலையான பங்களிப்பை சென்னை பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது.
அந்த காலத்தில் இருந்தது சென்னை பல்கலைக்கழகம் மட்டும்தான். நீதிக்கட்சி ஆட்சியில்தான் சென்னைக்கு வெளியே சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தற்போது தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் 22 பல்கலைக்கழகங்கள் உள்ளன. தமிழ்நாடு என்பது இந்தியாவிலேயே உயர்க்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாக விளங்குகிறது.
இந்தியாவில் தலைசிறந்த நூறு கல்வி நிறுவனங்களில் தமிழ்நாட்டில் மட்டுமே 18 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்தியாவில் தலைசிறந்த நூறு பல்கலைக்கழகங்களில் 21 பல்கலைக்கழகங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளது. தலைசிறந்த 100 கல்லூரிகளில் 32 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த நூறு ஆராய்ச்சி நிறுவனங்களில் 10 தமிழ்நாட்டில் உள்ளன. தலைசிறந்த 200 பொறியல் கல்லூரிகளில் 35 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. தலை சிறந்த மேலாண்மை கல்வி நிறுவனங்களில் 11 தமிழ்நாட்டில் உள்ளன. 100 மருத்துவ கல்வி நிறுவனங்களில் 8 தமிழ்நாட்டில் உள்ளன. 30 தலைசிறந்த சட்டக்கல்லூரிகளில் 2 தமிழ்நாட்டில் உள்ளன. 30 கட்டடக்கலை கல்லூரிகளில் 6 தமிழ்நாட்டில் உள்ளன.
கல்வியில் சிறந்த மாநிலமாக நாம் உயர்ந்து நிற்கிறோம். 100 ஆண்டுகளுக்கு முன்னாள் நீதிக்கட்சி ஆட்சியில் கல்விக்காக போட்டவிதைதான் இதற்கு காரணம். பள்ளிக்கல்வியை காமராஜரும், உயர்க்கல்வியை கலைஞரும் உயர்த்தினார்கள். நமது திராவிட மாடல் ஆட்சியில் உயர்க்கல்வியை ஊக்கப்படுத்தி வருகிறோம். ஆராய்ச்சி கல்வியாக அதனை உயர்த்தி வருகிறோம்.
டாபிக்ஸ்