அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - அன்புமணி ராமதாஸ் கண்டனம்
Jun 07, 2022, 04:32 PM IST
மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு! மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்த போதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன்? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : அரசு பள்ளிகளுக்கு மாணவர்களை அதிக அளவில் ஈர்க்கும் வகையில், ஆங்கிலவழிக் கல்வித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதிக அளவில் அரசு பள்ளிகளில் மாணவர்களை ஈர்க்கும் வகையில், முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன.
தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கக் கல்வித் துறையிலிருந்து ஆசிரியர்கள் பணி மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கு பெற்றோர் மத்தியிலும் பெரிய அளவில் வரவேற்பு இருந்ததன் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி யுகேஜி வகுப்புகளில் சேர்ந்தனர் .
இந்த சூழலில் தற்போது எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் மூடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு , மேம்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வகுப்புகளுக்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும் அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கை காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை வெகுவாக குறையும் சூழல் உருவாகியிருக்கிறது.
இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாட்டில் 2381 அங்கன்வாடிகளை அரசு பள்ளிகளுடன் இணைத்து தொடங்கப்பட்ட எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
இதன் மூலம் மாணவர்கள் அரசு பள்ளிகளுக்கு வராமல் தனியார் பள்ளிகளுக்கு செல்ல அரசே வழிகாட்டுகிறது! எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை நடத்துவதில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதை சரி செய்து நடத்துவது தான் அரசின் பணி. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை இருந்தால் புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.
அதை விடுத்து மழலையர் வகுப்புகளை மூடுவது தவறு! மழலையர் வகுப்பு ஆசிரியர்கள் கடந்த பிப்ரவரி மாதம் இட மாற்றம் செய்த போதே அவை மூடப்படும் என்ற செய்தி பரவியது. ஆனால், அப்போது அந்த செய்தியை மறுத்த பள்ளிக் கல்வித்துறை, இப்போது மூட ஆணையிட்டது ஏன்? என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும்!
மழலையர் வகுப்புகள் ஏழைக் குழந்தைகளுக்கு வரப்பிரசாதம். அவற்றை மூடி அடித்தட்டு மக்களின் கல்வி வாய்ப்பை பறிக்கக்கூடாது. மழலையர் வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், அதற்காக பயிற்சி பெற்ற மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! " என்று கேட்டுக்கொண்டுள்ளார்.