தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  திருமாவளவனை திடீரென சந்தித்து பேசிய வைகைச்செல்வன்.. அதிமுக கூட்டணியில் விசிக?.. நடந்தது என்ன?

திருமாவளவனை திடீரென சந்தித்து பேசிய வைகைச்செல்வன்.. அதிமுக கூட்டணியில் விசிக?.. நடந்தது என்ன?

Karthikeyan S HT Tamil

Published Jun 16, 2025 04:47 PM IST

google News
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுடன், விசிக தலைவர் திருமாவளவன் நடத்திய திடீர் சந்திப்பை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி மாற்றம் குறித்த செய்தி பரபரப்பாகியிருக்கிறது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுடன், விசிக தலைவர் திருமாவளவன் நடத்திய திடீர் சந்திப்பை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி மாற்றம் குறித்த செய்தி பரபரப்பாகியிருக்கிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனுடன், விசிக தலைவர் திருமாவளவன் நடத்திய திடீர் சந்திப்பை அடுத்து தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி மாற்றம் குறித்த செய்தி பரபரப்பாகியிருக்கிறது.

'மதச்சார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் விசிக சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அந்த பொதுக்கூட்டம் முடிந்த பின்னர், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் விசிக தலைவர் தொல்.திருமாவளவனை தனியாக சந்தித்துப் பேசினார். அப்போது, ‘பேசு பேசு நல்லா பேசு’ என்று தான் எழுதிய புத்தகத்தை திருமாவளவனிடம் கொடுத்தார் வைகைச்செல்வன். தொடர்ந்து இருவரும் அரசியல் குறித்து கிட்டத்தட்ட அரை மணி நேரம் பேசினார்கள்.

ஏற்கனவே திமுக கூட்டணியிலுள்ள கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்த சூழலில் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ‘எங்கள் கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும்’ என்று கூறிவருகிறார். அதேவேளையில், வரக்கூடிய 2026 சட்டமன்றத் தேர்தலில் கூடுதல் தொகுதிகள் கொடுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என்பதாக விசிக பொதுவெளியில் பேசிக்கொண்டு இருக்கிறது.

இந்தச் சூழலில், அதிமுக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை, திருமாவளவன் சந்தித்து நீண்ட நேரம் பேசியிருப்பது பெரும் அரசியல் பரபரப்பைக் கூட்டியிருக்கிறது. இதன் மூலம் அதிமுக - விசிக கூட்டணி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதிக தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்ற அடிப்படையில் அதிமுக கூட்டணியில் தொல்.திருமாவளவன் இணையக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, "திமுக கூட்டணியில் அதிக இடங்களை கேட்போம். தேர்தலில் எத்தனை தொகுதியில் போட்டியிடுவோம் என்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது. அதிக எதிர்ப்பார்ப்புகள் உண்டு. கட்சி நலன் முக்கியமானது. அதை விட கூட்டணி நலன் முதன்மையானது. எனவே, எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தேர்தல் நேரத்தில் அதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுப்போம். கூட்டணி ஆட்சி என்பதில் நாங்கள் தெளிவாக உள்ளோம். ஆனால், வரும் 2026 தேர்தல் அதற்கான காலம் அல்ல. திமுக கூட்டணியில் இருந்து சில கட்சிகள் வெளியேறும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுவது மாயத் தோற்றம். திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள்." என்று திருமாவளவன் கூறி இருந்தார்.

சு.கார்த்திகேயன், சீனியர் கன்டென்ட் ப்ரொடியூசராக இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் பணிபுரிகிறார். வானொலி, டிஜிட்டல் ஊடகங்களில் 13+ ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, தேசம் மற்றும் சர்வதேசம், பொழுதுபோக்கு, ஆன்மிகம், லைஃப்ஸ்டைல் உள்ளிட்ட பிரிவுகளில் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழில் செய்திகளை எழுதி வருகிறார். சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் இளங்கலை தகவல் தொழில்நுட்பம், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகம் மற்றும் தொடர்பியல் துறையில் பட்டம் பெற்றுள்ள இவர், கல்வி வானொலி ஞானவாணி, ஈ நாடு டிஜிட்டல், ஒன் இந்தியா தமிழ், டாப் தமிழ் நியூஸ், டைம்ஸ் நவ் ஆகிய நிறுவனங்களைத் தொடர்ந்து 2022 முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.