தளவாய் சுந்தரம் கட்சி பதவி பறிப்பு.. அதிரடி ஆக்ஷனில் இறங்கிய எடப்பாடி பழனிசாமி - கலக்கத்தில் குமரி மாவட்ட அதிமுக!
Oct 08, 2024, 02:31 PM IST
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம், கன்னியாகுமரி அதிமுக கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், அவரது பதவியை பறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு நடந்துகொண்டதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டி இருப்பதால், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தளவாய் சுந்தரம் M.L.A, அவர்கள் தான் வகித்து வரும் கழக அமைப்புச் செயலாளர், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த தளவாய் சுந்தரம்?
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்கு பின் பெரிய அளவில் சலசலப்புகள் ஏற்பட்டன. கன்னி யாகுமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், விஜய குமார் எம்.பி. ஆகியோரின் ஆதரவு நிர்வாகிகள் சிலர் ஓபிஎஸ் அணி மற்றும் தீபா பேரவைக்கு தாவினர். ஆனால், தளவாய் சுந்தரம் ஆதரவாளர்கள் மட்டும் மாற்று முகாமுக்கு செல்லவில்லை. இதேபோல் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், சசிகலாவை விமர்சித்து வந்தார். அவரை அதிமுகவிலேயே அந்த காலகட்டத்தில் தக்க வைத்ததில் தளவாய் சுந்தரம் பெரும்பங்காற்றினார்.
20 ஆண்டுகளுக்கு பிறகு வென்ற தளவாய் சுந்தரம்
அதிமுகவில் மாநிலங்களவை உறுப்பினர், அமைச்சர் என பல பதவிகளிலும் இருந்த தளவாய் சுந்தரத்துக்கு கடந்த 2011 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்தார். ஆனால், அவர் ஆற்றிய கட்சிப் பணிகள் காரணமாக அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார். இதற்கிடையில், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் களமிறங்கிய தளவாய் சுந்தரம் திமுக வேட்பாளரை தோற்கடித்து வெற்றி வாகை சூடினார். இந்த வெற்றியின் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு அதிமுகவுக்கு அந்த தொகுதியில் அங்கீகாரம் கிடைத்திருந்தது.
தளவாய் சுந்தரம் இடைநீக்கம்
இந்த நிலையில், அதிமுகவின் கோட்பாட்டிற்கு எதிராக செயல்பட்டதாகவும், சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு செயல்பட்டதால் அவர் கட்சி பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவின் முக்கிய முகமாக அறியப்பட்ட தளவாய் சுந்தரத்தின் இடைநீக்கம் அந்த மாவட்ட அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரணம் என்ன?
சமீபத்தில் கன்னியாகுமரியில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்ததால், கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்திருந்த நிலையில், கட்சியின் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால் எடப்பாடி பழனிசாமி இந்த நடவடிக்கை எடுத்தாகவும் கூறப்படுகிறது.
ஹெச்.ராஜா பதில்
அதிமுக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்தின் பதவிகள் பறிப்பு குறித்து பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் ஹெச்.ராஜாவிடம் திருச்சியில் செய்தியாளர்கள் எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், "தளவாய் சுந்தரத்தை வரவேற்கிறேன்" என பதில் அளித்துள்ளார்.
டாபிக்ஸ்