Vijay Visits Paranthur: முதல் முறையாக களத்திற்கு செல்லும் விஜய்! பரந்தூர் பயணம் ’டேக் ஆஃப்’ ஆகுமா?
Jan 18, 2025, 01:42 PM IST

வரும் ஜனவரி 20ஆம் தேதி அன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச உள்ளார். அரசியல் இயக்கத்தை தொடங்கிய பின்னர் முதன் முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜயின் அரசியல் பயணம் ’டேக் ஆப்’ ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சர்வதேச விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடும் பரந்தூர் மக்களை சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு காவல்துறை அனுமதி அளித்து உள்ளது.
எந்த இடத்தில் விஜய் மக்களை சந்திக்க உள்ளார் என்பது இன்று மாலை முடிவு செய்ய உள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை விதித்து உள்ளது. அனுமதி அளிக்கப்பட்டுள்ள இடத்தில் மட்டும்தான் மக்களை சந்திக்க வேண்டும். அதிக கூட்டத்தை கூட்டாமல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையிலான நபர்களே வர வேண்டும். அனுமதிக்கப்பட்ட வாகனத்தில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில்தான் வர வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில்தான் மக்களை விஜய் சந்தித்து முடிக்க வேண்டும் என காவல்துறை தெரிவித்து உள்ளது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த அக்டோபர் மாதத்தில் தமிழக வெற்றிக் கழகத்தை நடிகர் விஜய் தொடங்கி தனது கொள்கையை அறிவித்தார். திராவிடமும், தமிழ்த்தேசியமும் ஒன்றுதான் என்று பேசிய விஜய், வாரிசு அரசியலும், மதவாதமும்தான் நமது எதிரி என்று அறிவித்தார்.
வோர்க் ஃப்ரம் ஹோம் அரசியல்!
அதன் பின்னர் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் தமிழ்நாட்டின் முது பெரும் தலைவர்களின் பிறந்தநாள் மற்றும் நினைவுநாள் அன்று அவர்களின் திருவுருவ படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தும் புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளிவருவது வழக்கம்.
விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளம் பாதித்த மக்களை நேரடியாக சென்று பார்வையிடாமல், பனையூர் அலுவலகத்திற்கு அழைத்து நிவாரண உதவிகளை அளித்த சம்பவம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ’வெர்க் ஃப்ரம் ஹோம்’ அரசியல் செய்கிறார் என்ற விமர்சனம் விஜய் மீது வைக்கப்பட்டது.
ஆளுநரை சந்தித்த விஜய்!
இதனிடையே அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்து விஜய் மனு அளித்தார். அரசியல் கட்சியைத் தொடங்கிய பின்னர் விஜய் செய்த நேரடி அரசியல் செயல்பாடாக இது பார்க்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகத்திற்கு மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் விவகாரத்திலும், அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தின் தலையீடு அதிகம் உள்ளதாக ஜான் ஆரோக்கிய சாமி என்பவர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
’டேக் ஆப்’ ஆகுமா விஜயின் பயணம்!
இதனிடயே பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களையும், வேங்கைவயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களையும் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில் வரும் ஜனவரி 20ஆம் தேதி அன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் மக்களை தவெக தலைவர் விஜய் சந்தித்து பேச உள்ளார். அரசியல் இயக்கத்தை தொடங்கிய பின்னர் முதன் முறையாக களத்திற்கு சென்று மக்களை சந்திக்கும் விஜயின் அரசியல் பயணம் ’டேக் ஆப்’ ஆகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.