Thevar Jayanthi: கைரேகைச் சட்டப்போராளி முதல் பட்டியலின மக்களின் பாதுகாவலன் வரை - பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் கதை!
Oct 30, 2023, 06:10 AM IST
சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.
தமிழ்நாட்டில் எண்ணற்ற தலைவர்கள் தோன்றியிருக்கலாம். எண்ணற்ற தலைவர்கள் மறைந்து இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டின் வாக்கு வங்கி அரசியல் நிலைப்பாட்டை தேவரின்றி யாரும் நிகழ்த்திக் காட்டமுடியாது. அவர் உயிரோடு இருந்தாலும் சரி, உயிரோடு இல்லை என்றாலும் சரி, அதுதான் இன்றும் யதார்த்த நிலைப்பாடு. முத்துராமலிங்கத் தேவர், சாதியால் நிகழ்ந்த ஏற்றத்தாழ்வுகளை எதிர்க்கும் சுதந்திரப் போராட்டத்தியாகி. சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியப் பணிகளை அலங்கரித்து மக்களுக்கு நல்சேவையாற்றிய ஒரு வள்ளல்.
யார் இந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்? தமிழ்நாட்டில் ராமநாதபுரத்து மாவட்டத்தில் பசும்பொன் என்னும் கிராமத்தில் உக்கிரபாண்டி தேவருக்கும், இந்திராணி அம்மையாருக்கும் அக்டோபர் 30,1908ஆம் ஆண்டு ஒரே மகனாகப் பிறந்தவர். மிகுந்த வசதி வாய்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் இவர் தனது ஒரு வயதில் தாயை இழந்து தாய்ப்பாசத்திற்கு ஏங்கினார். பெரியதாயார் மீனலோசனி அம்மாவும், இஸ்லாமிய நட்புக்குடும்பத்தைச் சார்ந்த பெண்ணாலும் வளர்க்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு: தனது சிறுவயதில் குழந்தைசாமி பிள்ளை என்னும் நபரிடமும் பின், கமுதியில் உள்ள கிறிஸ்தவ பள்ளியிலும் பயின்ற பசும்பொன் தேவர், பின்னர் மதுரை - பசுமலை மேல்நிலைப்பள்ளியிலும், யூனியன் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளியிலும் பள்ளிப்படிப்பை படித்துக்கொண்டிருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, 1924ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைபாட்டால் பள்ளிசென்று முத்துராமலிங்கத்தேவரால் படிக்கமுடியவில்லை.
குற்றப்பரம்பரை சட்டத்திற்கு எதிரான தேவரின் போராட்டம்:
1920களில் மதராஸ் மாகாணத்தில் அம்பலகாரர், வலையர், கள்ளர், மறவர், உப்புக்குறவர் மற்றும் சில சமூக மக்களை ஒடுக்கும் வகையில் குற்றப்பரம்பரை சட்டத்தை(கை ரேகை சட்டம்) கொண்டுவந்தது, பிரிட்டிஷ் அரசு. அதன்படி, இச்சமூகங்களைச் சேர்ந்த வயது வந்த ஆண்கள் இரவில் இருக்கும் காவல்நிலையத்தில் தங்கியிருந்துவிட்டு, கை ரேகையினைப் பதிவுசெய்துவிட்டு, காலையில் வீடு திரும்பவேண்டும். ஒரு அவசர ஆத்திரத்திற்காக வேறு ஒரு ஊருக்குச் செல்லவேண்டும் அனுமதிச்சீட்டுப் பெறவேண்டும் உள்ளிட்டப் பல்வேறு கொடுமைகள் அப்போது அமலில் இருந்தன. அதனை, எதிர்க்கும்விதமாக மதுரை(பிரிக்கப்படாத தேனி, திண்டுக்கல்), ராமநாதபுரம், நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்களை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒன்று திரட்டி போராட்டம் செய்தார். தேவர் தலைமையில் நடந்த தொடர்போராட்டங்களால், பின் இச்சட்டத்தை நீக்கியது பிரிட்டிஷ் அரசு.
அரசியல் வாழ்வு: 1936ஆம் ஆண்டில் முதுகுளத்தூர் சட்டப்பேரவைத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, வென்று முதல்முறையாக எம்.எல்.ஏ ஆனார், தேவர்.
பின், 1937 பிப்ரவரியில் ராமநாதபுரம் தொகுதியில் தேவர் போட்டியிட்டார். அவருக்கு மக்களிடம் பெருகிவரும் ஆதரவைக் கண்டு அஞ்சிய நீதிக்கட்சி, ராமநாதபுர மன்னரை வேட்பாளராக நிறுத்தியது. ஆனால், அவற்றையெல்லாம் எளிமையாக கடந்து பெரும்வெற்றிபெற்றார், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்.
பட்டியலின மக்களின் ஆலயப்பிரவேசத்துக்கு காவலாக நின்றவர்:
வைத்தியநாத ஐயர், ராஜாஜி, என்.எம்.ஆர். சுப்புராமன் ஆகியோர், பட்டியலின மக்களை மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அழைத்துச்சென்று ஆலயப்பிரவேசம் நடத்த முடிவு செய்தபோது, ஆதிக்க சாதியினர் பலர் எதிர்த்தனர். அப்போது மேற்கூறிய மூவரும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஆதரவை நாடினர். அதற்கு தேவர் சம்மதித்தார். மேலும், எனது அன்புச்சகோதரர்களான பட்டியலின மக்கள் அன்னை மீனாட்சியை வணங்கி வீடு திரும்பும் வரை நான் பாதுகாப்புத் தருகிறேன் என்றும்; ஏதாவது கடும் அசம்பாவிதம் நிகழ்ந்தால், எதிர்ப்பாளர்களை சந்திக்கும் விதத்தில் சந்திப்பேன் எனவும் நோட்டீஸ் அடித்து விநியோகித்தார், தேவர். பின், பட்டியலின மக்களின் ஆலயப்பிரவேசம் அமைதியாக நடந்தது.
சுபாஷ் சந்திர போஸ் உடனான நட்பு: 1952ஆம் ஆண்டு, திரிபுரி கூட்டத்தில் காங்கிரஸின் அகில இந்திய தலைவர் பதவியில் போஸ் போட்டியிட்டார். இதில் தேவரின் ஆதரவோடு, சுபாஷ் சந்திரபோஸ் வென்றார். பின்னர், காந்தியின் தலையீட்டில் போஸ் அக்கட்சியை விட்டு விலகினார். அப்போது போஸ் துவங்கிய அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் இணைந்து மதுரையில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கூட்டம் நடத்தினார், போஸ். பின்னர், ஐஎன்ஏ எனப்படும் போஸின் சுதந்திரப்படைக்கு ஆட்களைத் தமிழ்நாட்டில் இருந்து அனுப்பியது உள்ளிட்டப் பல்வேறு சுதந்திரப்போராட்டத்தில் நிகழ்ந்த அரசியல் காரணங்களால் 1940ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை சிறையில் இருந்தார்.
1952,1957 பொதுதேர்தல்: காங்கிரஸ் இல்லாத ஆட்சியை உருவாக்க நினைத்த சுபாஷ் சந்திரபோஸுக்கு துணையாக, 1952ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் அருப்புக்கோட்டை எம்.பி.தொகுதி தேர்தலிலும், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ தொகுதியிலும் போட்டியிட்டு இரண்டிலும் வென்றார். பின், எம்.பி. பதவியை ராஜினாமா செய்து எம்.எல்.ஏவாக., ராஜாஜியை எதிர்த்து அரசியல் செய்தார்.
அதேபோல், 1957ஆம் ஆண்டு பொது தேர்தலில், தேவர் அருப்புக்கோட்டை எம்.பி. தொகுதியிலும், முதுகுளத்தூர் எம்.எல்.ஏ தொகுதியிலும் போட்டியிட்டார். ஆனால், இம்முறை எம்.பி. பதவியை மட்டும் தக்கவைத்துகொண்டு, எம்.எல்.ஏ பதவியை வென்றவுடன் ராஜினாமா செய்தார்.
1962-ல் நடந்த பொது தேர்தல்: இம்முறை லோக் சபா தேர்தலில் போட்டியிடும்போது தேவரின் உடல் நிலை மோசம் அடைந்தது. இருப்பினும் மக்கள் ஆதரவால், மீண்டும் வென்றார். கடைசியாக பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் 1963ஆம் ஆண்டு, அக்டோபர் 29 அதிகாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார். அவரது உடல் அமர்ந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
தேவர் பிறந்த நாளை தேவர் குருபூஜையாக, தேவர் ஜெயந்தியாக மக்கள் கொண்டாடி நினைவுகூர்கின்றனர்.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்