Priest Died: கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி - துரதிர்ஷ்டவசமாக பலி; நடந்தது என்ன?
May 22, 2024, 11:49 PM IST
Priest Died: கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி ரத்தம் குடித்த பூசாரி துரதிர்ஷ்டவசமாக பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Priest Died: தமிழ்நாட்டில் கோயில் திருவிழாவில் ஆட்டை வெட்டி, அதன் ரத்தத்தை குடித்த பூசாரி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி உயிரிழப்பு:
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள செட்டியாம்பாளையத்தில் கோயில் திருவிழாவில் நடந்த பரண் கிடாய் பூசையில், ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை விடாமல் குடித்த பூசாரி பழனிசாமி (45) மயங்கி விழுந்து பேச்சு மூச்சில்லாமல் இருந்தார். அவரைப் பரிசோதித்த ஊர்ப்பெரியவர்கள் பூசாரி பழனிசாமி உயிரிழந்ததை உறுதிசெய்தனர்.
இதுதொடர்பாக அருகிலுள்ள சிறுவலூர் போலீஸாருக்குத் தகவல் தெரியவந்தது. அதன்பேரில் சிறுவலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோயில் பூசாரி ஒருவர், ஆட்டின் ரத்தத்தைக் குடித்தல் என்பது தமிழ்நாட்டின் மண்சார்ந்த கோயில்களில் அடிக்கடி குடிக்கும் நிகழ்வு ஆகும். இதனால், ஒரு பூசாரி இறந்ததாகக் கூறப்படும் நிகழ்வு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிரேதப் பரிசோதனைக்குப் பின் தான், அவர் இறப்பிற்கான காரணம் முறையாகத் தெரியவரும்.
தமிழ்நாட்டில் இவ்வாறு எண்ணற்ற ஆபத்தான விநோதத் திருவிழாக்கள் பல்வேறு இடங்களில் நடந்து வருகின்றனர்.
அதேபோல், இந்தாண்டு, சத்தியமங்கலம் அருகே உள்ள வரதம்பாளையம் பத்ரகாளி மாகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவில் கோயில் பூசாரி முன்னிலையில் அப்பகுதியில் உள்ள மக்கள் ஒவ்வொரு நபராக வந்து சாட்டையில் அடிவாங்கி சென்று, தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர்.
ரிஸ்க்கான பறவை காவடி நேர்த்திக்கடன்:
மேலும், கடந்தாண்டு ஜூன் மாதம், தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே காளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, "பறவை காவடி எடுத்து, பூக்குழி இறங்கி" பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில், திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே அயன் கரிசல்குளம் கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ காளியம்மன் கோயில். இங்கு வைகாசி மாத கொடைத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மிக விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், முகூர்த்தகால் நட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழா, கடந்தாண்டு ஜூன் 3ஆம் தேதி, மாலை அயன் கரிசல்குளத்தில் அமைந்துள்ள விநாயகர் கோயிலில் இருந்து பெண்கள் மேள தாளங்கள் முழங்க, பால்குடங்கள் மற்றும் அக்கினி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்து நேர்த்திகடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். இதையடுத்து நடைபெற்ற தீமிதித் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
அதேபோன்று, திருவிழாவையொட்டி விநாயகர் கோயிலில் இருந்து காளியம்மன் கோயில் வரை அலகு குத்தி, பறவை காவடி எடுத்து வந்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். அயன் கரிசல்குளத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவருக்கு விநாயகர் கோயில் அருகே வைத்து அலங்காரம் செய்து முதுகில் மற்றும் பின் தொடையில் அழகு குத்தி அருள் இறக்கி 4 சக்கர வாகனத்தின் மேல்பகுதியில் பறவை பறப்பது போல அமைப்புடைய காவடியை செய்து, அதில் பறவை காவடி எடுத்தார். பக்தர்கள் அக்கினிச்சட்டி ஏந்தி பக்தி பரவசத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.
அதேபோல், கரூர் மற்றும் திண்டுக்கல், தர்மபுரி பகுதிகளில் தலைகளில் தேங்காய் உடைக்கும் நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துகின்றனர். இதனால், பக்தர்களுக்கு காயம் ஏற்பட்டு, உயிருக்கு ஆபத்துக்கூட ஏற்படும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும். எனவே, எந்தவொரு நம்பிக்கையும் கடவுள் மீது வைப்பது தவறில்லை. அதனால் நமக்கும் நம் குடும்பத்துக்கும் இன்னல் நேர்ந்துவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்.
டாபிக்ஸ்