அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 900 காளைகள் அவிழ்ப்பு: 17 காளைகளை அடக்கியவருக்கு கார்
Jan 15, 2024, 06:57 PM IST
அவனியாபுரம் அதிக காளைகளை அடக்கியவர்களுக்கும் பிடிபடாமல் ஆட்டம் காட்டிய காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கிய கார்த்திக் முதல் பரிசை வென்று, பரிசாக காரைப் பெற்றார்.
தைப்பொங்கல் திருநாளை ஒட்டி, மதுரை மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டுப்போட்டி அவனியாபுரத்தில் இன்று நடைபெற்றது. அதன்படி, அவனியாபுரத்தில் தமிழக அரசு சார்பில் இன்று (ஜன.15) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று, நிறைவுபெற்றுள்ளது.
காலை 7 மணிக்குத் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 900 காளைகள் அவிழ்க்கப்பட்டன. சுமார் 500 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இதையொட்டி, மதுரை சுற்றுவட்டாரத்தில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். காயம் அடைந்த 40க்கும் மேற்பட்டோருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
8 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடையே வாடிவாசல் பகுதியில் திடீரென ஒரு நாய் உள்ளே புகுந்தது. காவல்துறையினர் பலமுறை விரட்டியும் அந்த நாய் அங்கிருந்து செல்லவில்லை. இதனால் ஜல்லிக்கட்டு களத்தில் சிரிப்பலை ஏற்பட்டது. இப்போட்டியைக் காண ஏராளமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 17 காளைகளை அடக்கி கார்த்திக் முதல் பரிசையும்; 14 காளைகளை அடக்கி ரஞ்சித் குமார் இரண்டாம் பரிசையும், 10 காளைகளை அடக்கி முத்துகிருஷ்ணன் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.
முதல் பரிசை வென்ற கார்த்திக்கிற்கு கார் மற்றும் கன்றுடன் கூடிய பசுமாடு பரிசாக வழங்கப்பட்டது. சிறந்த காளையாக அவனியாபுரம் ஜி.ஆர். கார்த்திக் பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட காளை தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் உரிமையாளர் ஜி.ஆர். கார்த்திக்குக்கு கார் பரிசு தரப்பட்டது.
அப்போது 17 காளைகளை அடக்கிய வீரர் கார்த்திக் கூறுகையில், ‘’15 பெரிய ஜல்லிக்கட்டுகளில் கலந்திருக்கேன். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றிருக்கேன். வடமாடு மஞ்சுவிரட்டில் விளையாடி வருகிறேன். உடல் முழுக்க காயம் இருந்தாலும் தைரியம் இருந்தால் போதும்''என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்