Pamban bridge accident: பாம்பன் பாலத்தில் மீண்டும் விபத்து - 20 பேர் காயம்
Oct 20, 2022, 10:13 AM IST
பாம்பன் பாலத்தில் 2 அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம்: நாள்தோறும் ராமேஸ்வரத்துக்கு வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநிலத்திலிருந்து ஏகப்பட்ட நபர்கள் வந்த வண்ணம் இருக்கின்றனர்.
அப்போது அவ்வழியாகச் செல்லும் போது பாம்பன் பாலத்திலிருந்து கடல் அலையை ரசிக்க தங்களுடைய வாகனங்களைச் சாலை பாலத்தின் இரண்டு புறங்களிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுகிறது.
இந்நிலையில் இன்று (அக். 20) அதிகாலை ராமேஸ்வரம் பாம்பன் பாலத்திலிருந்து ராமநாதபுரம் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தும், திருச்சியிலிருந்து, ராமேஸ்வரம் நோக்கி சென்ற அரசுப் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 2 பேருந்துகளின் ஓட்டுநர்கள் உள்பட 20 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக உடனே காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன் பேரின் சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக பாம்பன் பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அதிகாலை மழை பெய்து பாம்பன் பாலத்தில் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்ததது. அதன் காரணமாகப் பேருந்து ஓட்டுநர்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
பாம்பன் பாலத்தில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.