சிராவயல் மஞ்சுவிரட்டு..மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பரிதாப மரணம்!
Jan 17, 2024, 03:16 PM IST
Siravayal Manjuvirattu: சிவகங்கை மாவட்டம் சிராவயல் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட இரண்டு பேர் உயிரிழந்தனா்.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சிராவயல் கிராமத்தில் நடக்கும் மஞ்சுவிரட்டு போட்டியில் மாடு முட்டியதில் சிறுவன் உள்பட 2 பார்வையாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே சிராவயலில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தை 3 ஆம் நாள் பாரம்பரியமாக மஞ்சுவிரட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு மஞ்சுவிரட்டு இன்று (ஜன.17) நடைபெற்று வருகிறது.
கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் மஞ்சுவிரட்டு விழாவினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் ஆஷா அஜித், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப சிதம்பரம் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி முன்னிலை வகித்தனர்.
முதலில் கோயில் காளைகளை அவிழ்த்து விட்டனர். அதனைத் தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. பல்வேறுப் பகுதிகளிலிருந்து 272 காளைகளும், 81 மாடுபிடி வீரர்களும் இந்த மஞ்சுவிரட்டில் பங்கேற்றுள்ளனர். மஞ்சு விரட்டை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் குவிந்திருந்ததால் கூட்டம் அலைமோதியது. பாதுகாப்பு பணியில் காவல் துறையைச் சார்ந்த சுமார் 1,000 காவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிறாவயல் மஞ்சுவிரட்டை முன்னிட்டு திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, தென்கரை, அதிகரம், மருதங்குடி, கும்மங்குடி உள்ளிட்ட பகுதிகள் விழாக்கோலம் பூண்டுள்ளன.
இந்நிலையில் மஞ்சுவிரட்டில் மாடுகளை அவிழ்த்துவிட்டபோது எதிர்பாராத விதமாக மாடு முட்டியதில் வலையபட்டியைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற 12 வயது சிறுவன் உயிரிழந்தான். மேலும் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரும் மாடு முட்டியதில் உயிரிழந்துள்ளாா். அவரது அடையாளம் இன்னும் அறியப்படவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, மஞ்சுவிரட்டுக்காக திடலைச் சுத்தம் செய்தல், தொழு மற்றும் பாதுகாப்பு வேலி அமைத்தல், பார்வையாளர்கள் அமரும் இடத்தைத் தயார் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன. இன்று (ஜன.17) காலை பெரியநாயகி அம்மன், தேனாட்சி அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர், வாண வேடிக்கை, மேளதாளத்துடன் மஞ்சுவிரட்டு தொழுவுக்கு கிராம மக்கள் சென்று அங்குள்ள மாடுகளுக்கு வேட்டி, துண்டு அணிவித்து மரியாதை செய்தனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்