Thiruvarur: திருவாரூரில் ஷாக்.. ஒரே நாளில் 10 போலி மருத்துவர்கள் அதிரடி கைது!
Apr 08, 2023, 12:36 PM IST
Fake Doctors Arrested: திருவாரூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் போலி மருத்துவர்களை கண்டறியும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்ட எஸ்.பி சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நன்னிலம், முத்துப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு மருந்து மாத்திரைகள் வழங்கியும், ஊசி போட்டும் சிகிச்சை அளித்து வந்த போலி மருத்துவர்களை கண்டறிந்தனர்.
இது தொடர்பாக மாப்பிள்ளைகுப்பம் பகுதியைச் சேர்ந்த செந்தில், கொல்லுங்மாங்குடியைச் சேர்ந்த சிவக்குமார், பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன், நாச்சிகுளம் கல்யாண சுந்தரம் உள்ளிட்ட 10 போலி மருத்துவர்களை போலீசார் கைது செய்து விசாரணைக்கு பின்னர் சிறையில் அடைத்துள்ளனர்.
இதுபோன்று, கடந்த சில தினங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் ஓமலூரில் மருத்துவம் படிக்காமலே ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த இரண்டு போலி மருத்துவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்தனர். இதனிடையே, தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியில் மருத்துவம் படிக்காமல் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக வரும் பொது மக்களுக்கு அதிக அளவு உள்ள டோஸ் மருந்து செலுத்துவதாக மருத்துவதுறைக்கு புகார் வந்தது.
இது தொடர்பாக ஊரக மற்றும் மருத்துவத்துறை இணை இயக்குனர் சாந்தி கொட்டாயூரில் உள்ள கொட்டாயூர் கிராமத்தில் முனுசாமி என்பவரது கிளினிக்கில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்பொழுது உரிய ஆவணங்கள் இன்றியும், முறையாக மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரிய வந்தது. இது குறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து போலி மருத்துவர் முனுசாமியை கைது செய்தனர்.
இந்த நிலையில், திருவாரூரில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வெப் ஸ்டோரி, வேலைவாய்ப்பு தகவல்கள், சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்