Sania Mirza: கதறி அழுத சானியா மிர்சா: ஆறுதல் சொன்ன கணவர் சோயப் மாலிக்!
Jan 28, 2023, 07:39 AM IST
Shoaib Malik: ‘உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்த அனைத்திற்கும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன்’ சோயிப் மாலிக்!
ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, தனது கிராண்ட்ஸ்லாம் வாழ்க்கையை உயர்நிலையில் முடித்ததை, விளையாட்டுத் துறையினர் சமூக ஊடகங்களில் பாராட்டி வருகின்றனர்.
மெல்போர்ன் பார்க் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் சானியா மிர்சா மற்றும் ரோஹன் போபண்ணா ஜோடி , பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி மற்றும் ரஃபேல் மாடோஸ் ஜோடியுடன் தோற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தது. பிரேசில் ஜோடி தங்களது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றது.
தனது கடைசி ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டியில் விளையாடி சானியா மிர்ஸா, போட்டி முடிந்த பின் பேசிய போது, உருக்கமாக பேசி, கதறி அழுதார். ‘தான் அழுதி, பட்டம் வென்றவர்களின் மகிழ்வான தருணத்தை கெடுக்க விரும்பவில்லை’ என்றும் அவர் பேசியிருந்தார்.
இந்நிலையில் சானியா இணை இரண்டாவது இடம் பிடித்ததற்கும், சானியாவின் பயணத்தை புகழ்ந்தும் பிரபலங்கள் பலரும் வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சானியா மிர்சாவின் கணவருமான சோயிப் மாலிக், தனது மனைவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் உருக்கமான வாழ்த்தையும், ஆறுதலையும் கூறியுள்ளார். அதில்,
‘விளையாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்கும் நீங்கள் மிகவும் தேவையான நம்பிக்கை.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் சாதித்த அனைத்திற்கும் உங்களைப் பற்றி பெருமிதம் கொள்கிறேன். நீங்கள் பலருக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள், தொடர்ந்து முன்னேறுங்கள். நம்பமுடியாத வாழ்க்கைக்கு பல வாழ்த்துக்கள்’
என்று அந்த பதிவில் சோயிப் மாலிக் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்