David Warner: ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப் போகிறேன்’-தேதியை அறிவித்த டேவிட் வார்னர்
Jun 04, 2023, 10:38 AM IST
Cricket Australia: 2011ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸி., அணிக்காக அறிமுகமானார் வார்னர்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னர். 36 வயதாகும் டேவிட் வார்னர் சமீபகாலமாக சிறப்பாக விளையாடவில்லை.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி கேபிட்டல்ஸை வழிநடத்தினார். ஐபிஎல் தொடரிலும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படியான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தவில்லை.
இதுவரை 103 டெஸ்டில் விளையாடி 25 சதம், 34 அரை சதம் உள்பட 8,158 ரன்கள் விளாசியிருக்கிறார் வார்னர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து வந்துள்ள வார்னர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து அடுத்த ஆண்டு ஓய்வு பெறப் போவதாக அவர் அறிவித்தார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்கு இன்னும் 4 நாட்களே இருக்கும் நிலையில், டேவிட் வார்னர் ஓய்வு குறித்து அறிவிப்பை வெளியிட்டிருப்பது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வார்னர் கூறியதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்டை எடுத்துக் கொண்டால், அடுத்த ஆண்டு (2024) ஜனவரியில் சொந்த ஊரான சிட்னியில் நடக்கும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டுடன் ஓய்வு பெற விரும்புகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல், இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் போட்டி ஆகிய டெஸ்ட் போட்டிகளில் வெற்றிகரமாக சாதிக்கும் பட்சத்தில், அடுத்து வரும் பாகிஸ்தான் தொடருடன் எனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொள்வேன். ஒயிட் பால் கிரிக்கெட்டைப் பொருத்தவரையில் அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ், அமெரிக்காவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரை விளையாடுவேன் என்றார் வார்னர்.
இங்கு தொடர்ச்சியாக ரன் குவித்து, அதன் பிறகு ஆஸ்திரேலியாவிலும் தொடர்ந்து அணியில் வாய்ப்பு கிடைத்தாலும் கூட பாகிஸ்தான் தொடருக்கு அடுத்ததாக நடக்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரில் நிச்சயம் விளையாடமாட்டேன். அதன் பிறகு வெள்ளைநிற பந்து கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்துவேன்.
ஒவ்வொரு போட்டியில் ஆடும் போதும், இது தான் நமது கடைசி போட்டி என்ற நினைப்பில் விளையாடுவேன். இது தான் எனது கிரிக்கெட் ஸ்டைல். இந்த அணியினருடன் அங்கம் வகிப்பதை மிகவும் விரும்புகிறேன். அவர்களுடன் உற்சாகமாக விளையாடுகிறேன். தொடர்ந்து கடினமாக உழைக்கிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஆஷஸ், 50 ஓவர் உலக கோப்பை போட்டி என்று அடுத்து முக்கியமான போட்டிகள் வருகின்றன. அதற்கு என்னை தயார்படுத்தி வருகிறேன்.' என்றார்.
2011ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி நியூசிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸி., அணிக்காக அறிமுகமானார் வார்னர்.
டாபிக்ஸ்