India at Paris Olympics: 14 வயது நீச்சல் வீராங்கனை முதல் உலக சாம்பியன்கள் வரை - பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய குழு விவரம்
Jul 20, 2024, 08:00 AM IST
14 வயது நீச்சல் வீராங்கனை முதல் அனுபவம் நட்சத்திரங்கள், சீனியர் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன்கள் என இந்தியா குழு 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் களமிறங்கவுள்ளது.
2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் 16 விளையாட்டுகளில், 117 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். இந்திய குழுவில் ரோஹன் போபண்ணா, ஷரத் கமல் மற்றும் பிவி சிந்து போன்ற உலகம் அறிந்த முகங்களும் இடம்பிடித்துள்ளனர். இவர்கள் கடந்த காலங்களில் பலமுறை ஒலிம்பிக் விளையாடுவதற்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.
2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களில் ஐந்து பேர் இந்திய குழுவுடன் இந்த முறை பயணிக்கிறார்கள். அத்துடன், இந்திய குழுவில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் முதல் முறையாக தங்களது ஒலிம்பிக் பயணத்தை மேற்கொள்கிறார்கள்.
இளம் வயது வீராங்கனை
இந்திய குழுவில் 14 வயதே நிரம்பிய நீச்சல் வீராங்கனை திநிதி தேசிங்கு இடம்பிடித்துள்ளார். இதற்கு முன் ஹெல்சின்கியில் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 11 வயதே நிரம்பிய ஆர்த்தி சாஹா போட்டியிட்டார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் மிகவும் இளவயதில் போட்டியிடும் இரண்டாவது வீராங்கனை என்ற பெருமையை தேசிங்கு பெறுகிறார்.
பெண்களுக்கான 200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் போட்டியில் தேசிங்கு போட்டியிட உள்ளார். வயதில் சிறியவராக இருந்தாலும் கடந்த ஆண்டு ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா குழுவின் ஒரு பகுதியாக இருந்தார். அத்துடன் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தோஹாவில் 2024 உலக அக்வாடிக் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்றார்.
சீனியர் மற்றும் ஜூனியர் உலக சாம்பியன்கள்
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் உலக சாம்பியன்ஷிப் தங்கப் பதக்கங்களை தொடர்ச்சியாக வென்ற நிகத் ஜரீன், இந்தியாவுக்காக 50 கிலோ எடைப் பிரிவுக்கான குத்துசண்டையில் களமிறங்குகிறார். பாரிஸில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கான பதக்க நம்பிக்கை தரும் போட்டியாளராக திகழ்கிறார்.
மல்யுத்தத்தில் ஜூனியர் உலக சாம்பியன்கள் இருவர் மீதும் பதக்க எதிர்பார்ப்பு உள்ளது. 19 வயதான ஆன்டிம் பங்கல், கடந்த 2022இல் ஜூனியர் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண்மணி ஆனார், பின்னர் 2023இல் இந்த பட்டத்தை தக்கவைத்தார்.
இதைத்தொடர்ந்து சீனியர் மட்டத்தில், அவர் 2023 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம், 2023 ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளி என அனைத்தையும் 20 வயதுக்குள் வென்று சாதித்துள்ளார்..
இவருக்கு அடுத்தபடியாக பெண்களுக்கான 76 கிலோ எடைப் பிரிவில் தகுதி பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையை ரீத்திகா பெற்றுள்ளார். 23 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாம்பியன்ஷிப் பட்டத்தையும், தனது எடைப் பிரிவில் தரவரிசை தொடர் பதக்கத்தையும் வென்ற முதல் பெண்மணி ஆவார்.
அனுபவமிக்க நட்சத்திரங்கள்
ஒலிம்பிக் தங்கமகன் நிரஜ் சோப்ராவுக்கு சவால் விடுக்கும் விதமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் செயல்பட்டார் கிஷோர் குமார் ஜெனா. அவர் 87.54 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இந்தியாவின் அதிவேக ஹர்ட்லர் ஜோதி யர்ராஜி மற்றும் ஸ்டீப்பிள் சேசர் பாருல் சௌத்ரி ஆகியோர் பாரிஸில் ஏதாவது சிறப்பாகச் செய்ய என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.
லக்ஷயா சென் தனது டீனேஜ் வயதிலிருந்தே பல பட்டங்களை வென்றவராக உள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில் உயர் தரவரிசையில் உள்ள எச்எஸ் பிரணாய் உடன் இணைந்து களத்தில் உள்ளார். லக்ஷயா சென் 2021 இல் உலக சாம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தையும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார், மேலும் 2022 இல் தாமஸ் கோப்பையை வென்ற இந்திய அணியிலும் ஒரு அங்கமாக இருந்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
டாபிக்ஸ்