Vehicle Accidents:ஷாக்! வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் - தொடரும் விபத்துக்கள்!
Dec 21, 2022, 06:28 AM IST
வட மாநிலங்களில் கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளதால் வாகன விபத்துக்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
டெல்லி மற்றும் உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக காலை வேளையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, இமாச்சலபிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த 3 நாள்களுக்கு கடும் பனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 2 நாள்களுக்கு ராஜஸ்தான், பிகார் மற்றும் மேற்கு வங்காளம், சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் அடுத்த சில நாட்களில் குறைந்தபட்ச வெப்பநிலை ஐந்து டிகிரி செல்சியஸாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், அரியானா, டெல்லி, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் காலையில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
அடர்ந்த மூடுபனியால் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 3 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அந்த மாநிலத்தில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் அரசு பேருந்துகள் இயங்காது என மாநில அரசு தெரிவித்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் கடும் மூடுபனி காரணமாக கடந்த ஞாயிற்று கிழமை அம்பாலா-யமுனாநகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் சுமார் 12 வாகனங்கள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்ட விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்தனர். கடந்த இரண்டு நாட்களாக யமுனா நகரை மூடுபனி சூழ்ந்துக்கொண்டு வாகன ஓட்டிகளுக்கு கடும் சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. கடும் பனி இன்னும் சில தினங்கள் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் சாலையில் வாகனங்களை இயக்க அச்சம் அடைந்து வருகின்றனர்.
இதையடுத்து கடும் மூடுபனிக்கு மத்தியில் வாகனம் ஓட்டும்போது, டிப்பர்கள் மற்றும் ஃபாக் விளக்குகளை இயக்குமாறு ஓட்டுநர்களிடம் போக்குவரத்து அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் பஞ்சாபின் பல பகுதிகளில் நிலவிய அடர்த்தியான மூடுபனியால் வாகனஓட்டிகள் பொதுமக்கள் அவதியடைந்தனர். பஞ்சாப் மாகாணத்தில் ராஜன்பூர் மாவட்டத்தில் உள்ள சிந்து நெடுஞ்சாலையில் நேற்று கடும் மூடுபனியால் மூடப்பட்டிருந்தது. இது குளிர்காலம் என்பதால், காலையில் வரும் பேருந்துகள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.
இந்த கடும் பனிமூட்டத்தால் சாலையில் எதிரில் வரும் வாகனங்கள் வருவதை கூட சரியாக பார்க்க முடியவில்லை. எதிரில் வாகனங்கள் வருகிறதா இல்லையா என்பதை கூட கணிக்கமுடியவில்லை. அந்த அளவிற்கு பனிமூட்டம் சூழ்ந்துள்ளது.
இந்தநிலையில் இந்த பனிமூட்டம் காரணமாக எதிரெதிர் திசையில் இருந்து வந்த பேருந்து ஒன்றொடொன்று மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 8 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். 23 பேர் காயமடைந்தனர். ஒரு பேருந்து பெஷாவரில் இருந்து கராச்சிக்கும், மற்றொரு பஸ் ராஜன்பூருக்குச் சென்று கொண்டிருந்தது.
விபத்தில் காயடைந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட பலர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இதைடுத்து அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் ஜனவரி 21 வரை காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு, வழக்கமான நேரத்தில் மூடப்படும் என்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார்.
டாபிக்ஸ்