Indian Railway: பாத்ரூம் கூட போக முடியவில்லை! "கேலிக்கூத்தான ரயில்வே" - ஏசி பெட்டியில் குவிந்த பயணிகள் அதிர்ச்சி
Mar 21, 2024, 02:20 AM IST
டெல்லியில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டியில் மூச்சு முட்டும் அளவில் பயணிகள் ஏறியதால் கடுமையான கூட்ட நெரிசல் ஏற்பட்ட புகைப்படத்தை பகிர்ந்து, பயணத்தின்போது கழிப்பறை செல்வதற்கு கூட கடுமையாக சிரமம் அடைந்ததாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர் வரை செல்லும் சேட்டக் எக்ஸ்பிரஸ் ரயிலில் பெண் ஒருவர் 3 டயர் ஏசி பெட்டியில் டிக்கெட் புக் செய்திருந்தார். அவர் தனது குழுவுடன் பயணித்த நிலையில், ரயில் கிளம்பிய சில மணி நேரங்களில் 3 டயர் ஏசி பெட்டி முழுவதும் பயணிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்துள்ளன. டிக்கெட் எடுக்காமல் பயணிகள் பலரும் ஏசி பெட்டியில் ஏறி நெரிசலை ஏற்படுத்தியுள்ளார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், ஏசி பெட்டியில் ஏறிய கூட்டத்தை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அத்துடன் இந்திய ரயில்வேயின் தற்போதைய நிலை வருத்தம் அளிக்கும் விதமாக "கேலிக்கூத்தாகி" இருப்பதாக தெரிவித்துள்ளார்.
கன்பார்ம் டிக்கெட் தன்வசம் இருக்கின்ற போதிலும், பயண நேரம் முழுவதிலும் சரியாக அமரவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.
கேலிக்கூத்தான ரயில்வே
இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் தனது எக்ஸ் பக்கத்தில், "இது சேடக் எக்ஸ்பிரஸ் 20473 இல் 3வது அடுக்கு ஏசி பெட்டியின் நிலைமை" என்று குறிப்பிட்டு, இந்திய ரயில்வே அமைச்சகம், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோரின் பெயர்களை டேக்செய்துள்ளார்.
அத்துடன், இந்திய ரயில்வே தற்போது கேலிக்கூத்தாகியுள்ளது. ஏசி வகுப்புக்கு பணம் செலுத்தியும் பொது பெட்டியில் பயணிக்கும் பயணிகள் போல் நாங்கள் கஷ்ட்டப்பட வேண்டுமா? எனவும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியையும் டேக் செய்திருக்கும் அவர், "டிக்கெட்டுக்கு பணம் செலுத்தியும் சரியாக உட்காருவதற்கு கூட இடம் இல்லை" எனவும் தெரிவித்துள்ளார்.
கழிப்பறை கூட செல்ல முடியவில்லை
தொடர்ந்து தனது பதிவில், "சுமார் 4 முதல் 5 மணி நேரம் வரை கழிப்பறை செல்வதற்கு கூட தங்களால் முடியவில்லை. பெண்கள் சிலர் குழந்தைகளுடன் உட்கார முடியாத நிலையில் இருந்தனர். ரயில் டிக்கெட் இல்லாமல் ஏறியவர்கள் அங்கிருந்தவர்கள் துரத்திக்கொண்டிருந்தார்கள்" எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஏசி பெட்டியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் புகைப்படத்தை பார்த்த இணையவாசிகள் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதோடு, மத்திய அரசையும் சாடியுள்ளனர்.
"அஸ்வினி வைஷ்ணவ் சார், சிறந்த ரயில் பயண அனுபவம் எப்போது கிடைக்கும்? நீங்களும் அரசாங்கமும் சிறப்பாகச் செயல்படுகிறீர்கள், ஆனால் இது சரி செய்யப்பட வேண்டும்" என்று இணையவாசி ஒருவர் கருத்தை பகிர்ந்துள்ளார்.
மற்றொரு பயனாளர், “என் நண்பர் ஒருவர் கூட மூன்று நாட்களுக்கு முன்பு பீகாரில் தேர்வுக்காகச் சென்றார். ஏசி முதல் அடுக்கு ஒன்றின் கேட்டில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நுழைந்ததால் அவரால் ரயிலில் ஏற முடியவில்லை. முதல் டயர் டிக்கெட் வாங்கிவிட்டு, மறுநாள் தான் அவர் வந்தார்” எனவும் மற்றொரு நபர், " ரயில்வேயில் மேம்படுத்த நிறைய இருக்கிறது. ஆனால் அதற்கு நேரம் எடுக்கும்.
2008இல் அலகாபாத்திலிருந்து (இப்போது பிரயாக்ராஜ்) ஹோலி அல்லது தீபாவளிக்கு பாட்னாவுக்கு ரயிலில் செல்வேன். சில சமயங்களில் என்னுடைய முன்பதிவு பெர்த்தைக்கூட என்னால் அடைய முடியமாமல் போகும். அந்த நாள்களில் அப்படித்தான் இருந்தது. ரயில்வேயை சிறப்பாக தனியார்மயமாக்க வேண்டும்" என்று குறிப்பிடடுள்ளார்.
இந்த விஷயத்தில் ரயில்வே தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை என தெரிகிறது.