Israel and Hamas war: 20,000 பாலஸ்தீனியர்கள் பலி: ஹமாஸ் தகவல்
Dec 22, 2023, 05:19 PM IST
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் கிட்டத்தட்ட 20ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஹமாஸுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவத் தாக்குதலில் 20,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்த பகுதியில் உள்ள சுகாதார அதிகாரிகளைச் சுட்டிக்காட்டி, அசோசியேட்டட் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை காஸாவின் போருக்கு முந்தைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 1% ஆகும். இந்தப் போர் காசாவின் கிட்டத்தட்ட 85% மக்களை இடம்பெயர வைத்துள்ளது. பரந்த கட்டடங்களைத் தரைமட்டமாக்கியுள்ளது.
இந்தச் சண்டையில் 20,057 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாகவும்; 53 ஆயிரத்து 320 பேர் காயமடைந்துள்ளதாகவும் காஸா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள் அல்லது சிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசோசியேட் பிரஸ் செய்திமுகமையின் கூற்றுப்படி, இந்த இறப்பினை ஹமாஸ் உறுப்பினர்கள் இவர்கள், பொதுமக்கள் இவர்கள் என சுகாதார அமைச்சகம் பிரித்துக் காட்டவில்லை. பொதுவாக கணக்கு செய்துள்ளது.
பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸ் அக்டோபர் 7அன்று இஸ்ரேலிய குடியிருப்புகளைத் தாக்கி, சுமார் 1,200 பேரைக்கொன்றது. 240 இஸ்ரேலியர்களைக் கடத்தியது. பின்னர் இஸ்ரேல் நாடு, பாலஸ்தீனிய போராளிக்குழுவான ஹமாஸுக்கு எதிராகப் போரை அறிவித்தது.
ஹமாஸின் ராணுவத் திறனை அழிக்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஆயிரக்கணக்கான வான்வழித் தாக்குதல்களையும், கடுமையான தரைவழித் தாக்குதலையும் நடத்தியது.
ஹமாஸ் தனது சுயநலத்துக்காக, நெரிசலான குடியிருப்புப் பகுதிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியது. இதன்மூலம் எதிர்தாக்குதலில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்களின் இறப்புக்கு ஹமாஸ் மறைமுகமாக காரணமாக அமைந்தது என அதன்மீது இஸ்ரேல் குற்றம்சாட்டுகிறது.
சுமார் 7,000 ஹமாஸ் பயங்கரவாதிகளை ராணுவம் கொன்றுள்ளதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த கூற்றை ஆதரிப்பதற்கான எந்த ஆதாரத்தையும் அது முன்வைக்கவில்லை என்று அசோசியேட்டர் பிரஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
போர் நிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்த போதிலும், 16 ஆண்டுகளாக காஸாவை ஆண்ட ஹமாஸ் போராட்டக்குழு அழிக்கப்படும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது.
"ஹமாஸை ஒழித்தல், எங்கள் பணயக்கைதிகளை விடுவித்தல் மற்றும் காசாவிலிருந்து அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டு வருதல் ஆகியவை நாங்கள் எங்களுக்கு நிர்ணயித்த இலக்குகள் ஆகும். அதனை அடையும் வரை நாங்கள் சண்டையை நிறுத்த மாட்டோம்" என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் எலி கோஹன் டெல் அவிவ், சர்வதேச ஆதரவுடன் போரை தொடர்வோம் என்று சொன்னார்.
தற்போதைய நிலையில் போர் நிறுத்தம் என்பது போராளிக்குழுவான ஹமாஸுக்கு கிடைத்த பரிசாகும். மேலும் இக்கால கட்டத்தில் ஹமாஸ் வலுவடைந்து, இஸ்ரேல் குடியிருப்பாளர்களை அச்சுறுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்