Martin Luther King: மகாத்மா காந்தியின் வழியை கடைப்பிடித்த மார்ட்டின் லூதர் கிங்!
Apr 04, 2023, 06:15 AM IST
Martin Luther King Jr. Memorial Day: மகாத்மா காந்திஜி வழியில் அறவழிப் போராட்டத்தையே விரும்பினார் மார்ட்டின் லூதர் கிங்.
சமூக உரிமைக்காக போராடிய மாபெரும் ஆபிரிக்க-அமெரிக்கத் தலைவர் தான் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். அவரது நினைவு நாள் இன்று (ஏப்.4)
ஆபிரிக்க-அமெரிக்க மனித உரிமை இயக்கத்தில் தலைவராக இருந்தார். மகாத்மா காந்திஜி வழியில் அறவழிப் போராட்டத்தையே விரும்பினார் மார்ட்டின் லூதர் கிங்.
1929-ஆம் ஆண்டு ஜனவரி 15-ஆம் நாள் அமெரிக்காவின் அட்லாண்டா (Atlanta) நகரில் பிறந்தார் மார்ட்டின் லூதர் கிங். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் அவர் சமயக்கல்வி கற்றார். பின்னர் அவர் ஒரு ( Dexter Avenue Baptist Church) பாப்டிஸ்ட் பாதிரியானார்.
கருப்பினத்தவர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்ட அமெரிக்க சூழ்நிலை அவரது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது.
அறிவியல் முன்னேற்றத்தில் உலகுக்கே முன்மாதிரியாக விளங்கிய அமெரிக்காவில் அதன் குடிமக்களுக்கு சரிசமமாக வாழும் சூழ்நிலை இல்லாமல் இருந்தது என்பது வேதனையான உண்மை.
கருப்பினத்தவர்களை தீண்டத்தகாதவர்களாக பார்த்தனர் வெள்ளையர்கள். உணவகங்கள், பேருந்துகள், பொழுதுபோக்கு இடங்கள் என எந்த பொது இடத்திலும் கருப்பர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்பட்டிருந்தது.
அந்த இடங்களை மட்டும்தான் கருப்பர்கள் பயன்படுத்த வேண்டும். மீறினால் சிறைத் தண்டனை கிடைக்கும்.
மார்ட்டின் லூதர் கிங்கிற்கு மகாத்மா காந்தியின் மீதும், அவரது அஹிம்சைப் போராட்டத்தின் மீதும் அளவு கடந்த மரியாதை உண்டு. காந்திஜியின் உருவப்படத்தை அவர் வீட்டில் மாட்டி வைத்திருந்தார்.
காந்தியவழியை விரும்பியதால் லூதர் கிங், தனது போராட்டத்தில் வன்முறை இல்லாததை உறுதி செய்வார்.
அறவழியில் போராடுவது பற்றி அறிந்து கொள்ள 1959-ஆம் ஆண்டு இந்தியாவுக்கும் வருகை தந்திருந்தார் மார்ட்டின் லூதர் கிங்.
. 1963-ஆம் ஆண்டு வாஷிங்டெனில் மிகப்பெரிய அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார் லூதர் கிங். ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
"என்றாவது ஒருநாள் வெள்ளையின சிறுவர்களும், கருப்பின சிறுவர்களும் கையோடு கை கோர்த்து நடக்க வேண்டும்" என்று அவர் நிகழ்த்திய உரை வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பதிக்க வேண்டியது.
அந்தப் பேரணி நடந்த அடுத்த ஆண்டு (1964ம் ஆண்டு) சம உரிமைக்காகப் பாடுபட்ட மார்ட்டின் லூதர் கிங்கிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் டென்னசியில் 1968-ஆம் ஆண்டு ஏப்ரம் 4-ஆம் நாள் ஒரு வெள்ளையினத் தீவிரவாதி மார்ட்டின் லூதர் கிங்கை துப்பாக்கியால் சுட்டார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 39 தான்.
அகிம்சை வழியை கடைப்பிடித்த மார்ட்டின் லூதர் கிங்கும் காந்திஜியை போலவே துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தார்.
டாபிக்ஸ்