PSLV-C55: சிங்கப்பூரின் 2 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் சீறிப் பாய்ந்தது பிஎஸ்எல்வி - சி55 ராக்கெட்!
Apr 22, 2023, 03:02 PM IST
PSLV-C55/TeLEOS-2: சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி55 ராக்கெட் இன்று பிற்பகல் விண்ணில் செலுத்தப்பட்டது.
சிங்கப்பூரை சேர்ந்த இரண்டு செயற்கைகோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி -சி55 ராக்கெட் இன்று பிற்பகல் சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான (இஸ்ரோ) வணிக ரீதியாக வெளிநாட்டு செயற்கைக்கோள்களையும் விண்ணில் நிலைநிறுத்தி வருகிறது. அந்தவகையில், சிங்கப்பூரைச் சேர்ந்த டெலியோஸ்-2 (TeLEOS-2) எனும் புவி கண்காணிப்பு செயற்கைக் கோளை விண்ணில் ஏவுவதற்கு இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இண்டியா லிமிடெட் நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்காக இஸ்ரோ பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட்டை வடிவமைத்திருந்தது.
இந்நிலையில், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் தளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-55 ராக்கெட் இன்று பிற்பகல் 2.19 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் வெள்ளிக்கிழமை பிற்பகல் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், சிங்கப்பூரை சேர்ந்த டெலியோஸ்-2 (TeLEOS-2)செயற்கைக்கோளுடன், 16 கிலோ எடை கொண்ட லூமிலைட்-4 (Lumelite-4) என்ற சிறிய செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்பட்டது.
750 கிலோ எடை கொண்ட டெலியோஸ்-2 செயற்கைக்கோள் மூலம் புவி ஆய்வு, இயற்கை பேரிடர் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும். செயற்கை துளை ரேடார் மூலம் 1 மீட்டர் தெளிவுத்திறனில் தரவை வழங்கும்திறன் கொண்டது டெலியோஸ்-2.
இஸ்ரோ விண்ணில் ஏவிய பிஎஸ்எல்வி -சி55 ராக்கெட்டில் இருந்து அதன் முதல் பாகம் வெற்றிகரமாக பிரிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.