HT Elections Story: ‘நாடாளுமன்றத் தேர்தல் 1971’ இரண்டாக உடைந்த காங்கிரஸ்! மாஸ் காட்டிய இந்திரா!
Feb 06, 2024, 05:45 AM IST
“HT Elections Story: 14 வங்கிகளை தேசியமயமாக்கி அதிரடி காட்டிய இந்திரா, மன்னர் மானியங்களை ஒழித்தார். இது கம்யூனிஸ்ச கொள்கைக்கு ஆதரவாக செல்வதாக இந்திரா மீது கட்சிக்குள் அதிருப்தியையும், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது”
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் வரும் நடைபெற உள்ள 18 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேர்தல் மேகங்கள் தென்படத் தொடங்கிவிட்ட நிலையில் நாடு விடுதலை அடைந்தது முதல் கடந்த 2019ஆம் ஆண்டு ஆண்டு வரையிலான நாடாளுமன்றத் தேர்தல் களத்தை HT Elections Story தொடர் மூலம் உங்கள் நினைவுக்கு கொண்டு வருகிறோம்.
நாடு விடுதலை அடைந்த பிறகு 1950 ஜனவரி 26ஆம் ஆண்டு இந்தியா தன்னை குடியரசு நாடாக அறிவித்துக் கொண்டது. முதல் முறையாக சாதி, மதம், இனம், மொழி, பாலினம், சமூக, உள்ளிட்ட எந்த வித பேதமும் இன்றி 21 வயது நிரம்பிய இந்தியர்கள் அனைவருக்கும் வாக்குரிமையை இந்தியக் குடியரசு வழங்கியது.
1952, 1957, 1962 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய பொதுத்தேர்தல்களில் வென்று ஜவஹர்லால் நேரு பிரதமர் ஆக இருந்தார். 1964 ஆம் ஆண்டு நேரு இறந்த நிலையில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனார். சாஸ்திரியின் மறைவுக்கு பிறகு 1966ஆம் ஆண்டு இந்திரா காந்தி பிரதமர் ஆகி இருந்தார். 1967 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காந்தி மீண்டும் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.
இருப்பினும் காங்கிரஸ் கட்சியில் ஏற்கெனவே இருந்த மூத்த தலைவர்களான மொராஜிதேசாய், நீலம் சஞ்சீவ ரெட்டி, காமராஜர் உள்ளிட்டோருடன் இந்திரா காந்திக்கு கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்து 1969ஆம் ஆண்டு நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிரொலித்தது. காங்கிரஸ் கட்சி சார்பில் நீலம் சஞ்சீவ ரெட்டி குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், வி.வி.கிரியை சுயேச்சை வேட்பாளராக நிறுத்தி இந்திரா காந்தி ஆதரவு திரட்டினார்.
இறுதியில் திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் இந்திரா காந்தியின் வேட்பாளரன விவி கிரி குடியரசுத் தலைவராக வென்றார். மேலும், 14 வங்கிகளை தேசியமயமாக்கி அதிரடி காட்டிய இந்திரா, மன்னர் மானியங்களை ஒழித்தார். இது கம்யூனிஸ்ச கொள்கைக்கு ஆதரவாக செல்வதாக இந்திரா மீது கட்சிக்குள் அதிருப்தியையும், மக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுத் தந்தது.
நிதி அமைச்சர் பதவியில் இருந்து மொரார்ஜிதேசாயை இந்திரா காந்தி நீக்கிய நிலையில், இந்திரா காந்தியை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீலம் சஞ்சீவ ரெட்டி நீக்கினார்.
இந்திய தேசிய காங்கிரஸ் ஆனது காமராஜர், நீலம் சஞ்சீவ ரெட்டி, மொரார்ஜி தேசாய் ஆகியோரை கொண்ட காங்கிரஸ் ஸ்தாபன காங்கிரஸ் என்றும், இந்திரா காந்திக்கு ஆதரவு அளிப்போர் இந்திரா காங்கிரஸ் என்றும் அழைக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை குறைந்தாலும், திமுக உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இரண்டு ஆண்டுகள் வரை ஆட்சியை தொடர்ந்தார்.
1971ஆம் ஆண்டில் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்திக்க இந்திரா காந்தி தயார் ஆனார். வறுமையை ஒழிப்போம் என்ற கோஷத்துடன் தேர்தலை சந்தித்த இந்திரா 352 தொகுதிகளில் வென்று மீண்டும் பிரதமர் ஆனார்.
இந்திரா காந்தி உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட திமுக தமிழ்நாட்டில் 23 தொகுதிகளையும் இந்திரா காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இருந்தது. ஸ்தாபன காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட்ட காமராஜர் மட்டுமே வெற்றி பெற்றார்.
ஸ்தாபன காங்கிரஸ் 16 இடங்களிலும், பாஜகவின் தாய் அரசியல் அமைப்பான பாரதிய ஜனசங்கம் 22 இடங்களிலும், சுதந்திரா கட்சி 8 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. இடதுசாரி கட்சிகளான சிபிஎம் 25 இடங்களையும், சிபிஐ 23 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. காங்கிரஸ் கட்சியின் தனிப்பெரும் முகமாக இந்திரா காந்தி உருவெடுத்தார்.