Flash Back 2022: அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்திய தேர்தல்கள் - ஓர் பார்வை
Dec 30, 2022, 07:27 AM IST
2022 ஆம் ஆண்டு இந்திய அரசியல் களம் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தது. குறிப்பாக உத்தரப்பிரதேசம் தொடங்கி குஜராத் வரை நடைபெற்ற தேர்தல்களின் சிறப்பு தொகுப்பை இங்கு காணலாம்..!
2022-ம் ஆண்டு இறுதி கட்டத்தில் நாம் பயணித்து கொண்டிருக்கிறோம். இந்தாண்டு இந்திய அரசியல் களம் பல்வேறு சாதனைகளையும், சோதனைகளையும் சந்தித்தது. அதிலும், சட்டமன்றத் தேர்தல்களில் செல்வாக்குமிக்க கட்சிகள் சரிவை சந்தித்ததும், புதிய கட்சிகள் முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதித்ததும் நடந்துள்ளன. 2022-ம் ஆண்டு உத்தரப்பிரதேசம் தொடங்கி குஜராத் வரை நடைபெற்ற தேர்தல்களின் சிறப்பு தொகுப்பு இதோ..!
உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022
நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் சட்டமன்றத் தேர்தல் கடந்த பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகின. மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 255 இடங்களை கைப்பற்றியது.
பாஜகவின் முக்கிய போட்டியாளராக கருதப்பட்ட அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி 111 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், பகுஜன் சமாஜ் கட்சி 1, காங்கிரஸ் 2 என மிகவும் சொற்பனமான இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
பா.ஜ.க., வெற்றியால் யோகி ஆதித்யநாத் முதல்வராக 2-வது முறையாக பதவியேற்று கொண்டார். உத்தரப்பிரதேசத்தில் ஒரு முதலமைச்சா் 5 ஆண்டு முழு பதவிக்காலத்திலும் பதவி வகித்து, மீண்டும் முதல்வராக பதவி ஏற்றது 37 ஆண்டுகால உபி அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
கோவா சட்டமன்றத் தேர்தல் 2022
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டமன்றத்துக்கு தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14-ம் தேதி ஒரே கட்டமாக நடந்தது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகின. இத்தேர்தலில் 20 தொகுதிகளில் பா.ஜ.க., வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்டது. காங்கிரஸ் 11 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 2 தொகுதிகளையும் கைப்பற்றின. பாஜகவைச் சேர்ந்த பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக முதல்வர் அரியணையில் தொடர்கிறார்.
உத்தராகண்ட் சட்டமன்றத் தேர்தல் 2022
உத்தராகண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. அதோடு, வாக்கு எண்ணிக்கை மார்ச் 10-ம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. ஆட்சி அமைக்க 36 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில் பா.ஜ.க 47 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. புஷ்கர் சிங் தாமி முதல்வராக பதவியேற்றார்.
காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2017-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் 57 தொகுதிகளில் பா.ஜ.க வெற்றி பெற்ற நிலையில், தற்போது நடந்த தேர்தலில் 47 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருக்கிறது. 2017-ல் நடந்த தேர்தலில், 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற காங்கிரஸ், இந்த ஆண்டு நடந்து முடிந்த தேர்தலில், 19 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் 2022
பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மார்ச் 10-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் வகையில் அமைந்தது. இதற்கு காரணம், காங்கிரஸ் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த பஞ்சாபில் காங்கிரஸ், பா.ஜ.க-வுக்கு மாற்றாக களத்தில் இறங்கிய ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக ஆட்சியை கைப்பற்றியது தான். பெரும்பான்மையை நிருபிக்க 59 தொகுதிகள் தேவைப்பட்ட நிலையில், 92 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தது. முதல்வராக அக்கட்சியின் மாநில தலைவர் பகவந்த் மான் பொறுப்பேற்றார்.
பல முறை பஞ்சாபில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் கட்சி 18 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி 2-ம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் 77 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றி இருந்தது. ஆம்ஆத்மி கட்சி 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் பல உட்கட்சி பூசலுக்கு மத்தியில் இத்தேர்தலை சந்தித்தது. பாஜக-வுக்கு இங்கு செல்வாக்கு இல்லாத நிலையில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய கட்சியாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.
மணிப்பூர் சட்டமன்றத் தேர்தல் 2022
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 60. மணிப்பூர் சட்டமன்றத்துக்கான தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக பிப்ரவரி 28-ம் தேதி, 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 2-ம் கட்டமாக, 22 தொகுதிகளுக்கான தேர்தல் மார்ச் 5-ம் தேதி நடைபெற்றது. தேர்தல் முடிவுகள் மார்ச் 10-ம் தேதி வெளியாகின.
நடந்து முடிந்த மணிப்பூர் சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க 32 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்ற பிற மாநிலக் கட்சிகள் 23 தொகுதிகளில் வெற்றி பெற்றன. மணிப்பூரில், பா.ஜ.க தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. மணிப்பூரின் முதல்வராக பைரன் சிங்கே இந்த முறை பதவியேற்றிருக்கிறார்.
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் 2022
இமாச்சலப் பிரதேசத்தின் சட்டமன்றத்துக்கான தேர்தல் நவம்பர் 12-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. 68 தொகுதிகளுக்கு நடைபெற்ற இத்தேர்தலின் முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியாகின. பெரும்பான்மையை நிருபிக்க 35 தொகுதிகள் தேவைப்படும் நிலையில், 40 தொகுதிகளில் வெற்றி பெற்று காங்கிரஸ் கட்சி இமாச்சலப் பிரதேசத்தில் ஆட்சியை கைப்பற்றியது.
இதையடுத்து, முதல்வராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றுக்கொண்டார். பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. பா.ஜ.கவை விட காங்கிரஸ் 15 தொகுதிகள் அதிகம் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், இரு கட்சிகளுக்கும் இடையேயான வாக்கு வித்தியாசம் 0.9 சதவீதம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத் சட்டமன்றத் தேர்தல் 2022
பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலத்தின், சட்டமன்றத்துக்கான தேர்தல் இரண்டு கட்டங்களாக கடந்த டிசம்பர் மாதம் 1 மற்றும் 5-ம் தேதிகளில் நடைபெற்றது. முடிவுகள் டிசம்பர் 8-ம் தேதி வெளியிடப்பட்டன. மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 156 தொகுதிகளை கைப்பற்றி வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது பா.ஜ.க.
காங்கிரஸ் கூட்டணி 17 தொகுதிகளையும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளையும் கைப்பற்றின. பூபேந்திர பாய் படேல் முதல்வராக பதவி ஏற்றார். மோர்பி பாலம் விபத்து விவகாரம், பில்கிஸ் பானு வழக்கு குற்றவாளிகள் விடுதலை, ஆம் ஆத்மி வருகை முதலியவை குஜராத் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட நிலையில், பா.ஜ.க வேட்பாளர்களே அங்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார்கள்.
டாபிக்ஸ்