Work: மன ஆரோக்கியம் முக்கியம்.. 6 இலக்க மாத சம்பளத்தை உதறிவிட்டு பேக்கரி ஊழியரான பெண்.. முன்னாள் கூகுள் ஊழியரின் கதை!
Jun 15, 2024, 03:06 PM IST
Work: 6 இலக்க மாத சம்பளத்தை உதறிவிட்டு பேக்கரி ஊழியரான பெண்ணின் கதையும் அதற்குப்பின் இருக்கும் காரணம் குறித்தும் அறிந்துகொள்வோம்.
Work: அமெரிக்க தொழில்நுட்ப வல்லுநராகப் பணி செய்யும் இளம்பெண் ஒருவர், தனது ஆறு இலக்க சம்பளத்தை விட்டுவிட்டு, பிரான்ஸில் பேக்கரிக்கு தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்யும் பணியில் சேர்ந்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பளம் குறைந்த பணிக்கு தொழில் நுட்ப வல்லுநர் வரக் காரணம்:
வலேரி வால்கோர்ட் என்னும் இளம்பெண், அமெரிக்காவில் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான கூகுள் மற்றும் அமேஸானில் பணிபுரிந்தவர். 2022ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து வெளியேறிய வலேரி வால்கோர்ட், பிரான்ஸுக்குப் புலம்பெயர்ந்தார். அங்கு பேஸ்ட்ரி செஃப் எனப்படும் பேக்கரிகளுக்குத் தேவையான உணவுகளைத் தயாரிப்பதற்குப் பயிற்சி பெற்றார். வால்கோர்ட், பேக்கரியில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட வந்தபோது, பெரிய அளவு மாதச் சம்பளத்தை இழந்தார். ஆனால், அதற்காகத் தனக்குத் துளி அளவும் வருத்தம் இல்லை என்று தெரிவித்த அவர் தனக்கு இங்கே பெரியளவில் சந்தோஷம் கிடைப்பதாகக் கூறினார்.
அதேபோல், தனக்கு இந்தப் பணி மிகவும் பிடித்திருக்கிறது என்றும் கூறினார்.
கூகுளிலும் பணியாற்றியிருக்கும் வலேரி வால்கோர்ட் தனக்கு கூகுளில் பணியாற்றியபோது ஒரு லட்சம் டாலர் சம்பளம்(இந்திய மதிப்புக்கு ரூ.83 லட்சம்) கிடைத்தது. ஆனால், அதை விட தனக்கு தன் மன ஆரோக்கியம் மிக முக்கியம் என்றும், தன் மன ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்காக பேக்கரி சமையலர் பணிக்கு வந்ததாகக் கூறியுள்ளார். மேலும், கடந்த கால கார்ப்பரேட் வாழ்க்கையில், தினம்தோறும் தான் எரிவதுபோல் தனக்குத் தோன்றியதாக தன் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
தற்போது கிடைக்கும் சம்பளக் காசோலை தனது மன ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
வால்கோர்டின் தற்போதைய சம்பளம்:
வால்கோர்ட் 2020ஆம் ஆண்டு ஒரு பெரிய தொழில் மாற்றத்தை செய்ய முடிவு செய்தார். அவர் பிரான்சில் உள்ள ஒரு பேக்கரி சமையல் நிறுவனத்துக்கு விண்ணப்பித்து ஏற்றுக்கொள்ளப்பட்டார். 2022ஆம் ஆண்டின் பிற்பகுதியில், அவர் தனது வேலையை விட்டுவிட்டு, தனக்குப் பிடித்த பணியை முழுநேரமாக செய்ய பிரான்சுக்கு வந்தார்.
தற்போது, 34 வயதான வால்கோர்ட், பிரான்ஸில் இருக்கும் கிராமமான டூர்னான்-சுர்-ரோனில் உள்ள மைசன் சாப்ரான் என்ற உணவகத்தில் பேக்கரி உணவக உதவியாளராகப் பணிபுரிகிறார். இந்த பணியில் அவர் ஆண்டுக்கு சுமார் 30,000 டாலர் சம்பாதிக்கிறார். (தோராயமாக இந்திய ரூபாய் மதிப்பில் ரூ .25 லட்சம்) மற்றும் ஆண்டுக்கு ஐந்து வாரங்கள் ஊதிய விடுமுறையைப் பெறுகிறார்.
வால்கோர்ட் தனது சம்பளம், தனது வாடகை மற்றும் பிற செலவுகளை வசதியாக ஈடுகட்டுகிறது என்று கூறுகிறார். மேலும், அவர் தனது சேமிப்பு அனைத்தையும் பிரான்சுக்கு வருவதற்காக செலவழித்ததால், தற்போது அவர் தனது வங்கி இருப்பை மீண்டும் கட்டியெழுப்பும் பணியில் சேமிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவில் இருந்து முற்றிலும் வேறுபட்ட பிரான்ஸ் வேலை கலாசாரம்:
வால்கோர்ட், தனது வேலையை நேசிக்கும் அதே வேளையில், அமெரிக்காவிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் வேறுபட்ட பிரான்ஸ் வேலை கலாசாரத்தையும் நேசிக்கிறார்.
"பிரான்ஸ் கலாசாரத்தின்படி, எப்போது எல்லாம் ஓய்வெடுக்க வேண்டுமோ அப்போது எல்லாம் கட்டாயமாக ஓய்வெடுக்க வேண்டும். ஒவ்வொரு முறையும் ஒரு கிளாஸ் ஒயின் அருந்தலாம்," என்று அவர் தனது பணியின் தன்மையை விளக்கினார். அமெரிக்காவைப் போல், அவரது பிரான்ஸ் சக ஊழியர்களும் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டும் என நிர்பந்திக்கவில்லை.
வால்கோர்ட் வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை செய்கிறார். அவளுக்கு இப்போது கிடைக்கும் ஓய்வு நேரத்தில், அவள் தனக்கு புதிய திறன்களைக் கற்றுக்கொள்கிறார். மேலும், யோகா போன்ற பொழுதுபோக்குகளை எடுத்துக்கொள்கிறாள். அதேபோல், யுகுலேலே விளையாடுவது, ஸ்கேட்போர்டிங் விளையாடுவது போன்ற பணிகளிலும் ஈடுபடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்