தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  Arvind Kejriwal: திகார் சிறை செல்லும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.. காவலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Arvind Kejriwal: திகார் சிறை செல்லும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்.. காவலை நீட்டித்து நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Karthikeyan S HT Tamil

Apr 01, 2024, 12:38 PM IST

google News
liquor policy case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.
liquor policy case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

liquor policy case: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்று முடிவடைந்த நிலையில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சி 100 கோடி  ரூபாய் ஆதாயம் அடைந்ததாக அக்கட்சியின் தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால்,  அமலாக்கத் துறை அதிகாரிகளால் கடந்த 21 ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.  இந்த வழக்கில் தொடர்ந்து 9 முறை சம்மன் அனுப்பியும் நேரில் ஆஜராகாமல் இருந்த நிலையில் அமலாக்கத் துறை அவரை கைது செய்தது. 

இதையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலை மார்ச் 28 வரை அமலாக்கத் துறை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதற்கிடையில், அமலாக்கத் துறையால் தான் விசாரணை எதுவுமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த கைது நடவடிக்கை தனது அடிப்படை உரிமையை மீறுவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டு கெஜ்ரிவால் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையில் இருந்து தற்போதைக்கு எந்த நிவாரணமும் அளிக்க முடியாது என்று கூறியிருந்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை ஒரு வாரத்தில் பதில் அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து,  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை ஏப்ரல் 1 வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருந்த போதும், அவர் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் முதலமைச்சர் பணிகளை மேற்கொண்டு வந்தார்

இந்த நிலையில்,  அரவிந்த் கெஜ்ரிவாலின் காவல் இன்றுடன் (ஏப்ரல் 1)  முடிவடைந்த நிலையில்,  மீண்டும் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டார்.  அப்போது அமலாக்கத் துறையின் காவலை நீட்டிக்கத் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.  இதையடுத்து, வருகிற ஏப்ரல் 15ஆம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைத்திருக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவை அடுத்து கெஜ்ரிவால் டெல்லி திகார் சிறையில் அரவிந்த் கெஜ்ரிவால் அடைக்கப்பட உள்ளார். சிறையில் அடைக்கப்பட உள்ள நிலையில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது சிறையில் இருந்தே பணிகளை தொடருவாரா?  என்ற கேள்வி எழுந்துள்ளது. 

மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில், மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஏப்ரல் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது ஆம் ஆத்மி கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மதுபானக் கொள்கை முறைகேடு விவகாரம் தொடர்பாக மார்ச் 21-ஆம் தேதி சிறையில் இருந்து வருகிறார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்.

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்படும் நான்காவது ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால் ஆவார். இந்த வழக்கில் ஏற்கெனவே முன்னாள் துணை முதல்கர் மணிஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர குமார் ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி